சென்னை: புதிய கல்விக் கொள்கை என்பது எங்களை பொருத்தவரையில், அது ஆர்எஸ்எஸ் கல்விக் கொள்கை. அதை ஒருபோதும் நாங்கள் ஏற்கமாட்டோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். இதுகுறித்து அமைச்சர் அளித்த பேட்டி: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தான் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது பேசச் சொன்னதை அப்படியே பேசுகிறாரா? தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யும் ஒன்றிய அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
எங்களைப் பொருத்தவரையில் புதிய கல்விக் கொள்கை என்பது ஆர்எஸ்எஸ்-ன் கல்விக் கொள்கை. அதை ஒரு போதும் ஏற்கமாட்டோம். இதற்காக தமிழ்நாடு போராடும், அதில் வெற்றி பெறும். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு முற்றிலும் நிராகரிக்கிறது. பிஎம் பள்ளிகள் திட்டம் குறித்து தமிழ்நாடு தரப்பில் ஒரு குழு அமைத்து அதன் பிறகே முடிவு எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ெதளிவாக கூறப்பட்டுள்ளது. அதை மூடி மறைத்துவிட்டு, ஒப்புக் கொள்வதாக சொன்னீர்களே என்று திரும்பத் திரும்ப பேசுகிறார்.
ஒரு பெரிய மனிதருக்கு இது அழகல்ல. ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி நிதியை திடீரென புதிய கல்விக் கொள்கையை காரணம் காட்டி நிறுத்தி வைத்துள்ளது ஒன்றிய அரசு. கல்வி நிதியில் அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். இந்தி அல்லாத மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளதாக கூறும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது தாய்மொழியான ஒடிய மொழியின் நிலை இப்போது என்ன என்பதை விளக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் தான் மக்களவையில் அமர்ந்துள்ளனர். அவர்களை அவமதிப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிப்பதாகும். இவ்வாறு அன்பில் மகேஸ் கூறினார்.