தமிழ்நாடு கடலோர பகுதிகளுக்கு புதிய ஆபத்து சூழ்ந்துள்ளது. அடுத்தடுத்து கேரள மாநிலம் ெகாச்சி கடல் பகுதியில் நடக்கும் விபத்துகள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. கடலோர பகுதியை நம்பி வாழும் தமிழ்நாடு மீனவர்களுக்கு முதலில் இலங்கை கடற்படை எதிரியாக இருந்தது. தற்போது கேரள கடற்பகுதியில் நடக்கும் சம்பவங்கள் எதிரியாக மாறியுள்ளது. அதுவும் தேசத்திற்கு எதிரான புதிய ஆபத்தாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியின் நீளம் 1,076 கி.மீ ஆகும். இது இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலோரப் பகுதியாகும்.
தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் ஜலசந்தி வரை நீண்டுள்ளது. இந்த கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடாவில் உள்ள பாக் ஜலசந்தி வழியாக இலங்கையுடன் கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவின் மொத்த கடற்கரை நீளத்தில் 15% தமிழ்நாடு கடலோரப் பகுதியாகும். குஜராத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டின் கடற்கரை இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலோரப் பகுதியாகும். இதை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரம் தான் இந்த கடல் பகுதி.
ஆனால் கேரளாவில் அரபிக்கடலில் எம்எஸ்சி எல்சா 3 கப்பல் கவிழ்ந்ததை தொடர்ந்து மற்றுமொரு கப்பல் நடுக்கடலில் எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் குமரி மாவட்டம் உட்பட தமிழ்நாடு கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் அபாயம் அதிகரித்துள்ளது. லைபீரியா கொடியுடைய எம்எஸ்சி எல்சா 3 சரக்கு கப்பல் கொச்சி கடற்கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் மே 25ம் தேதி மூழ்கியது. கப்பலில் 640 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் ஆபத்தான பொருட்களும், 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தன.
இவற்றில் சுமார் 100 கன்டெய்னர்கள் கடலில் மிதந்து, கேரளா, தமிழ்நாட்டில் கடற்கரைகளில் கரை ஒதுங்கின. இவற்றில் பிளாஸ்டிக் துகள்கள், பாலித்தீன், கால்சியம் கார்பைடு உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் இருந்தன.
இந்த பாதிப்பு அடங்கும் முன்பு சிங்கப்பூர் எம்வி வான்கய் 503 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு பேய்பூர் கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் சென்ற போது கன்டெய்னர் வெடிப்பால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கப்பலில் 100 டன் பங்கர் ஆயில் கப்பலில் உள்ளதால் கடற்கரை பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எல்சா 3 கப்பலில் உள்ள ரசாயணம் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதி வரை பரவிய நிலையில் சிங்கப்பூர் கப்பலில் உள்ள ஆயிலும் தமிழ்நாடு கடலில் கலக்கும் அபாயம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கடல் வளங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும், மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் இந்த தடை விதிக்கப்படுகிறது.
ஆனால் அடுத்தடுத்து கேரள கடல் பகுதியில் நடக்கும் விபத்துகளால் தமிழ்நாடு கடல் வளம் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலோர பகுதிகளை கண்காணிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. குறிப்பாக கடற்படை மற்றும் கடலோர காவல் படை அதற்காகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு வழக்கம் போல் கேரள கடல் பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் இந்த விபத்துகளை ஒரு பார்வையாளராக கடந்து செல்வது போல் தெரிகிறது. இது தேச நலன் சம்பந்தப்பட்டது. இன்னும் ஒருபடி மேலாக சொல்லப்போனால் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கேரள கடல்பகுதியில் நடந்த இந்த கப்பல் விபத்துகளை ஒன்றிய அரசு இப்படி அணுகினால் தான் நமது கடல் வளம் பாதுகாக்கப்படும்.