வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஊராட்சிகளில் ரூ.84.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பள்ளி வகுப்பறை, சமையலறை உள்ளிட்ட புதிய கட்டிடங்களை சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார். வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பேட்டை, பூசிவாக்கம், நாயக்கன்பேட்டை, புதுபேட்டை, உள்ளாவூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மையம், புதிய சமையலறை கூடம் உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சேகர் முன்னிலை வகித்தார்.
விழாவில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு அய்யம்பேட்டை ஊராட்சியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் மற்றும் ரூ.20.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். அேதபோல், பூசிவாக்கம் ஊராட்சியில் ரூ.13.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் ரூ.7.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம், உள்ளாவூர் ஊராட்சியில் ரூ.4.48 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் ரூ.28.19 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம், நாயக்கன்பேட்டை ஊராட்சியில் ரூ.4.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றினை பொதுமக்கள் பயன்பாட்டிக்காக திறந்து வைத்தார்.
அப்போது, பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கிராமங்களுக்கு புதிய சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மழைநீர் வடிகால்வாய், கிராமப்புற பேருந்து இயக்குவது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துத்தர கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டறிந்து உடனடியாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், காஞ்சனா, ஒன்றிய கவுன்சிலர்கள் எழிலரசி சுந்தரமூர்த்தி, கமலா சண்முகம், அமலிசுதாமுனுசாமி, சஞ்சய்காந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் எம்மிஸ்ரல்ல பார்த்திபன், லெனின்குமார், உஷா தெய்வசிகாமணி, ரீட்டாமதுரைவீரன் உட்பட ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.