‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கே போட்டியிடுவது என இலைக்கட்சியின் முக்கிய நிர்வாகி சர்வே எடுக்க தொடங்கியிருக்கிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘டெக்ஸ்டைல் மாவட்டத்தில் இலை கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள முக்கிய நபரான மாஜி அமைச்சர் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தற்போது ரகசிய சர்வே எடுத்து வருகிறாராம்.. டெக்ஸ்டைல் மாவட்டத்தில் உள்ள தொகுதியை தேர்ந்தெடுக்கும் வேலையில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.. கள நிலவரம் குறித்து தனக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தனது டீமுக்கு உத்தரவு வேற போட்டுள்ளாராம்.. அந்த டீம் அந்த குறிப்பிட்ட தொகுதியில் சர்வே நடத்தி வருகிறதாம்.. தற்போது வரை அவருக்கு இறங்குமுகமாக உள்ளதாம்.. ஒருவேளை சர்வேயின் முடிவு சரியில்லை என்றால், முக்கிய முடிவை எடுக்க இலை கட்சியின் முக்கிய நிர்வாகி முடிவு செய்துள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடல் ஊரின் குடி தாலுகாவில் புரோக்கர்களின் ஆதிக்கம் ரொம்பவே அதிகரித்துள்ளதாமே..’’
எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடல் ஊர் பெயர் கொண்ட மாவட்டத்தின் குடி தாலுகாவில் 4 குறுவட்டங்களும், 109 வருவாய் கிராமமும் இருக்காம்.. இங்குள்ள பின்தங்கிய கிராமவாசிகள் சான்றிதழ் தேவைக்காக தினமும் அலைகிறார்களாம்.. வாசலிலே வரவேற்கும் புரோக்கர் கூட்டம் வந்த வேலையை உடனே முடித்து தருவதாக உறுதியளிக்க சில அதிகாரிகளின் பெயர்களும் அடிபடுகிறதாம்.. இதேபோல் மற்ற பிரிவுகளிலும் புரோக்கர்கள் ஊடுருவ அப்பாவி மக்கள் பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்கிறார்களாம்.. இது ஒருபுறமிருக்க, ஆவண காப்பகத்தில் யார் வேண்டுமானாலும் செல்லலாம் எனுமளவுக்கு ஆதரவற்ற காப்பகமாக அவ்வப்போது காட்சி அளிக்கிறதாம்.. ஆவணம் மாயமாகுதலும், திருத்தங்களும் சகஜமாக நடக்கிறதாம்.. தற்போது ஜமாபந்தி நடப்பதால் மனு எழுதவும் புரோக்கர்களிடம் போட்டா போட்டி நிலவுகிறதாம்.. புரோக்கர்களின் பிடியிலிருந்து குடி மீட்கப்படுமா என்ற முணுமுணுப்பு மாவட்ட நிர்வாகம் வரை எட்டியிருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சிக்கு புதிய தலைவர் வந்த பிறகு சமூகம் சார்ந்தவர்களே அதிகமாக நியமிக்கப்பட்டு வருவதாக நிர்வாகிகளின் குமுறல் சத்தம் ஒலிக்க தொடங்கி உள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் மலராத கட்சியின் நிலை ஏற்கனவே மங்கி பரிதாபகரமான நிலையில்தான் இருக்காம்.. இப்போது இன்னும் ஒரு இடி இறங்கியிருக்கிறதாம்.. தற்போது ஒரு தரப்பு சமூகம் சார்ந்தவர்களையே பொறுப்புகளில் நியமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்காம்.. அதாவது, மலராத கட்சியின் மாநில தலைமைக்கு புதிதாக வந்தவரின் சமூகம் சார்ந்தவர்களே, தற்போது தமிழக அளவில் கட்சியில் முழு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என புகார்கள் கிளம்பியிருக்கு.. ஏற்கனவே, மாவட்ட அளவில் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களை தவிர, தற்போது புதிதாக பொறுப்பில் உள்ளவர்கள் அனைவருமே புதிய மாநில தலைமை சமூகம் சார்ந்தவர்கள்தான் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவிக்கிட்டு வருது.. பூட்டு மாவட்டத்தை பொறுத்தவரை, கிழக்கு பகுதியின் முக்கிய நிர்வாகியான லிங்கத்தின் பெயரைக் கொண்டவரின் நடவடிக்கைகளில், புதிய மாநில தலைவர் வந்ததில் இருந்தே நிறைய மாற்றங்கள் தெரிகிறதாம்.. தன்னை சுற்றிலும் தான் சார்ந்த சமூகத்தினரை மட்டுமே வைத்துக் கொள்வதோடு, எந்த கூட்டமாக இருந்தாலும் முக்கிய நிர்வாகிகளை பெயர் குறிப்பிட்டு பேசுவதில்லையாம்.. கடந்த வாரம் கட்சி அலுவலக திறப்பு விழாவில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மேடையில் இடமே தரவில்லையாம்.. இது மற்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கு.. கட்சியை வளர்க்கிறாங்களா, இல்லை இருக்கிற கொஞ்ச பெயரையும் இல்லாமல் ஆக்கும் நடவடிக்கையிலே இறங்குறாங்களா.. இப்படி இருந்தால் எப்படி என புலம்பல் சத்தம் மாவட்டம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘பள்ளிக்கூடம் திறக்கிற நேரத்துல திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால சிறை காக்கிகள் ரொம்பவே தவிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டுல 9 சென்ட்ரல் ஜெயில், டிஸ்ட்ரிக்ட் ஜெயில், சப் ஜெயில்னு 100க்கும் மேற்பட்ட ஜெயில்கள் செயல்படுது.. இதுல பாதுகாப்பு பணியில காவலர்கள், ஜெயிலர்கள், சூப்பிரண்டுன்னு ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க பணிபுரிஞ்சுக்கிட்டு வர்றாங்க.. இந்நிலையில், முதல் நிலை காவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்காம, சமீபத்துல 150 ஜெயில் காவலர்களுக்கு பணியிடமாற்றம் செஞ்சாங்க.. மேலும் ஓரிரு நாட்கள்ல 2ம் நிலை காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்குதாம்.. இந்த பணியிட மாறுதல் காவலர்கள் மத்தியில பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குதாம்.. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்குற நேரத்துல, காவலர்கள் தங்களோட பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் எல்லாம் கட்டி முடிச்சிட்டாங்களாம்.. இந்த நேரத்துல பார்த்து பணியிட மாறுதல் செஞ்சிருக்குறாங்களே, அதுவும், பணியிட மாற்றம் 400 முதல் 500 கி.மீ தூரத்திற்கு போட்டிருக்குறாங்கன்னு ரொம்பவே புலம்பி தவிக்கிறாங்களாம்.. சிறைகள்ல, கைதிகளைவிட இந்த புலம்பல் தான் இப்ப அதிகமா ஒலிக்க தொடங்கி உள்ளதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.