ஒசூர்: இந்தியாவில் ஜம்ஜெட்பூருக்கு அடுத்ததாக டாடா நிறுவனம் தமிழ்நாட்டின் ஒசூரில் புதிய தொழில் நகரத்தை உருவாக்குகிறது. உருக்கு தொழிற்சாலையை ஜம்ஜெட்பூரில்அமைத்த டாடா நிறுவனம் ஓசூரில் மின்னணு தொழில் நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. டாடாவின் வருகையால் ஒசூரும் ஜம்ஜெட்பூருக்கு இணையான தொழில்நகராக உருவாகும் என்பது தமிழ்நாடு அரசின் நம்பிக்கையாக உள்ளது.
அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களை டாடா மேற்கொள்ளும் போது அதை பின்பற்றி பல தொழில்கள் ஒசூருக்கு வரும் என நம்பப்படுகிறது. ஜப்ஜெட்பூர் தொழில் நகரத்தின் ஆதாரமாக உருக்கு தொழில் மட்டுமே உள்ளதற்கு மாறாக ஓசூரில் பல்வகை தொழில்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் தொடர்பு தொழிலுக்கு தேவையான திறன் படைத்தவர்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஏராளமானோர் உள்ளன.
பெங்களூருவில் 40 கிலோ மீட்டரிலேயே ஒசூர் அமைந்துள்ளதால் ஐ.டி. தொழில் வளர நல்ல வாய்ப்பாகும். பெங்களூருவுடன் இணைந்து இரட்டை ஐடி. தொழில் நகரமாக ஒசூர் உருவாக வாய்ப்புள்ளது. ஒசூரில் உள்ள டாடா நிறுவனம் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐ-போன்களை தயாரித்து வருகிறது. ஐபோன் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் புதிதாக ஏராளமான பணியாளர்களையும் நியமித்து வருகின்றது. ஒசூரில் ஏற்கனவே டி.வி.எஸ். அசோக் லேலண்ட், ஓலா, ஏதர் ஆகிய வாகன நிறுவனங்களும், டைட்டன் உள்ளிட்ட ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன.
ஒசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வந்துள்ளதால் அந்நகரம் பிரம்மாண்ட தொழில் நகராக உருவாவது உறுதி.