*பணிகள் முடிந்தும் காட்சி பொருளானது
நாகர்கோவில் : நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பணிகள் முடிந்தும், புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன.
இதில் 1, 2, 3 ஆகிய மூன்று பிளாட்பாரங்களில் இருந்து திருநெல்வேலி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி என 3 மார்க்கமும் ரயில்களை இயக்க முடியும். பிளாட்பாரம் 1ஏ திருவனந்தபுரம் மார்க்கம் மட்டுமே உள்ள ரயில்களை கையாள முடியும்.
இந்த ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பயணிகள் ஏறும் வசதியுடன் கூடிய எஸ்கலேட்டர் அமைந்து உள்ளது. இறங்கும் வசதி கிடையாது. இதனால் பயணிகள் நடைமேடை அல்லது லிப்ட் வசதியை தான், இறங்கி வர பயன்படுத்த வேண்டும்.
லிப்ட் என்பது முதல் பிளாட்பாரத்தில் நுழைவு வாயிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க, இறங்கும் வசதிக்கான எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இந்த பணிகள் தொடக்கத்தில் வேகமாக நடந்தன.
பின்னர் பணிகள் கிடப்பில் கிடந்தன. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்ததன் அடிப்படையில் மீண்டும் இறங்கும் தன்மை கொண்ட எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்தன. தற்போது உபகரணங்கள் எல்லாம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் எஸ்கலேட்டர் உள்ளது. ஆனால் இன்னும் இயக்கப்பட வில்லை.
இதனால் 2, 3 பிளாட்பாரங்களில் இருந்து நடைமேடை வழியாக வந்து படிக்கட்டு வழியாக 1 வது பிளாட்பாரத்தில் இறங்க வயதானவர்கள், பெண்கள் பெரும் சிரமம் அடைகிறார்கள். லிப்ட் வசதியை பயன்படுத்த வேண்டி உள்ளது.
ஆனால் இது நுழைவு வாயிலில் இருந்து சற்று தூரம் லக்கேஜ்களை சுமந்து கொண்டு செல்ல வேண்டி உள்ளது. எனவே புதிதாக அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள இறங்கும் தன்மை எஸ்கலேட்டர் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஏற்கனவே உள்ள ஏறும் தன்மை கொண்ட எஸ்கலேட்டர் முறையாக இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தவிர புதிதாக அமைய உள்ள 4, 5 வது பிளாட்பாரங்களுக்கு செல்வதற்காக எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
பேட்டரி கார் சேவை முடக்கம்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வயதானவர்கள், மாற்று திறனாளிகள் வசதிக்காக பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பேட்டரி கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள், மாற்று திறனாளிகள் முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2 வது 3 வது பிளாட்பாரத்துக்கு செல்ல சிரமப்படுகிறார்கள்.
கட்டண பிரச்னை காரணமாக பேட்டரி கார் சேவை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் கேட்ட போது எஸ்கலேட்டர் சேவை இயங்க தொடங்கினால் சற்று சிரமம் குறையும். பிளாட்பாரம் 2, 3 ல் தரை தளம் புதுப்பிக்கப்படுகிறது.
இதனால் பேட்டரி கார் சேவை இயக்க முடியாத நிலை உள்ளது. இந்த புதுப்பிப்பு பணிகள் முடிந்ததும், மறுபடியும் பேட்டரி கார் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் . இறங்கும் எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. பரிசோதனை முடிந்ததும் இயங்க தொடங்கும் என்றனர்.