மதுரை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க ஒன்றிய அரசு முயன்று வருவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், நியூட்ரினோ திட்டம் செயல்படுத்த ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன? என்றனர்.
அப்போது ஒன்றிய அரசு தரப்பில், ‘விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒன்றிய அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி, திட்டங்கள் எல்லாம் தற்போது காலாவதியாகி விட்டது. எனவே, அவகாசம் தேவைப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு மீதான விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.