சென்னை: தமிழில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துவிட்டு, தற்போது கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். இதற்காக சொந்த அணியை உருவாக்கி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்கிறார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ‘சினிமாவில் நடிக்கும்போது கார் ரேஸில் ஈடுபட மாட்டேன். கார் ரேஸ் சீசனில் சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டில் நடந்து வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். 2 கட்டங்களாக நடக்கும் இப்பந்தயம் கடந்த 17ம் தேதி தொடங்கியது. தற்போது 2வது சுற்று இந்திய நேரப்படி நேற்று மதியம் 3:40 மணிக்கு தொடங்கியது. இதில் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது ரேஸ் டிராக்கில் அவர் ஓட்டிச்சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. டயரில் புகை எழுந்த நிலையில், அஜித் குமார் சட்டென்று காரை நிறுத்தியதால் காயமின்றி உயிர் தப்பினார்.