கிளாஸ்கோ: நேபாளம் – நெதர்லாந்து இடையிலான டி20 போட்டி டை ஆனதை அடுத்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, 3 முறை சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டு நெதர்லாந்து வெற்றி பெற்று சாதனை படைத்தது.ஸ்காட்லாந்தில், நெதர்லாந்து, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் இடையிலான டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது.
கிளாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில், நெதர்லாந்து – நேபாளம் அணிகள் மோதின. முதலில் ஆடிய நெதர்லாந்து 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்தது. அதன் பின், 153 வெற்றி இலக்குடன் ஆடிய நேபாளம் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்ததால், ஆட்டம் டை ஆனது. அதையடுத்து நடந்த சூப்பர் ஓவர் போட்டியில், நேபாளம், 6 பந்துகளில் 19 ரன் எடுக்க, பின் ஆடிய நெதர்லாந்தும் 19 ரன் மட்டுமே எடுத்தது.
பின், 2வது சூப்பர் ஓவரில், நெதர்லாந்து எடுத்த 17 ரன்களை, நேபாளம் தனது முறை வந்தபோது மீண்டும் எடுத்தது. அதனால், டி20 வரலாற்றில் முதல் முறையாக 3வது தடவை சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. அதில், நேபாள வீரர்கள் 4 பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல், 2 விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஆடிய நெதர்லாந்து அணியின் மைக்கேல் லெவிட், முதல் பந்தில் அற்புதமாக சிக்சர் பறக்க விட்டு தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதன் மூலம் டி20 வரலாற்றில் நெதர்லாந்து அணி, 3 சூப்பர் ஓவர் போட்டியில் வென்று புதிய அத்தியாயம் படைத்தது.