புதுடெல்லி: இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் 11ம் தேதி நிலவரப்படி நிகர நேரடி வரி வசூல் 22.48 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.6.93 லட்சம் கோடியாக உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் தனிநபர் வருமான வரி வசூல் ரூ.4.47 லட்சம் கோடியும், கார்ப்பரேட் வரி வசூல் ரூ.2.22 லட்சம் கோடியும் இடம் பெற்றுள்ளது. பத்திரப் பரிவர்த்தனை வரி ரூ. 21,599 கோடியாக உயர்ந்துள்ளது. மற்ற வரிகள் ரூ. 1,617 கோடியை எட்டியுள்ளன. இதே போல் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை ரூ.1.20 லட்சம் கோடி மதிப்பிலான ரீ பண்ட் வழங்கப்பட்டது. மொத்த அடிப்படையில், நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்து ரூ.8.13 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வசூலில் தனிப்பட்ட வருமான வரி ரூ.4.82 லட்சம் கோடியும், கார்ப்பரேட் வரி ரூ.3.08 லட்சம் கோடியும் அடங்கும்.