காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் பலியான 25 இந்தியர்களின் உடல் விமானப்படை விமானம் மூலமாக மகாராஷ்டிராவுக்கு கொண்டு வரப்பட்டது. எஞ்சிய 2 பேரின் சடலங்கள் சாலை மார்க்கமாக உபிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்திற்கு 10 நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக 27 இந்தியர்கள் பஸ்சில் சென்றிருந்தனர். இதுபோல ஆன்மீக பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் 104 பேரும் 3 பஸ்களில் சென்றனர்.
இதில் ஒரு பஸ் நேற்று முன்தினம் காத்மாண்டு செல்லும் வழியில் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள அபு கைரேனி என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சில் இருந்த 27 இந்தியர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், பலியானவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, இந்திய விமானப்படை விமானம் நேபாளத்தின் பாரத்பூருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து 25 இந்தியர்களின் உடல் மற்றும் உயிர் பிழைத்த 10 பேருடன் மகாராஷ்டிராவின் ஜல்கானுக்கு புறப்பட்டது. முன்னதாக, எஞ்சிய 2 பேரின் சடலம் மற்றும் உயிர் பிழைத்த 51 யாத்ரீர்கள் சாலை மார்க்கமாக உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்திற்கு நேற்று வந்தடைந்தனர்.