காத்மாண்டு: நேபாளத்தில் இந்தியர்களை ஏற்றி சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 27 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயமடைந்தனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி இந்தியாவை சேர்ந்த பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவர், உதவியாளர் உட்பட 43 இந்தியர்கள் இருந்தனர். தனாஹூ மாவட்டம்,அய்னா பஹாரா என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பஸ் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஸ்சில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் இருந்து 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிக்காக நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்றும் மருத்துவ குழுவினருடன்அந்த இடத்துக்கு சென்றது என நேபாள செய்தி இணையதளமான மை ரிபப்ளிக்கா தெரிவித்தது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது என அம்மாநில அமைச்சர் அனில் பாட்டீல் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் சித்வான் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தன. அதில் இந்தியர்கள் உள்பட 65 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.