சென்னை: நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். மேலும், நெம்மேலியில் செயல்பட்டுவரும் 110 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளையும், குடிநீரின் தரத்தினையும் பரிசோதனை செய்து இந்நிலையத்தின் முழு திறனான 110 மில்லியன் லிட்டர் அளவிற்கு தினந்தோறும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.