நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் தட்சணாமூர்த்தி (27), தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும், அருகே உள்ள உளியநல்லூர் ஊராட்சி வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் 2 நாட்களுக்கு முன், மேட்டுவேட்டாங்குளம் பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நெமிலி போலீசில் தட்சணாமூர்த்தி புகார் கொடுத்தார். அதில், வெள்ளைக்குட்டை பகுதியை சேர்ந்த சிலர், ‘என்னை தாக்கி கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை கிராமத்தையொட்டியுள்ள விவசாய நிலத்தின் அருகே நண்பர்களுடன் தட்சணாமூர்த்தி பேசி கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் ஒரு கும்பல் வந்தது. அவர்களை பார்த்ததும் நண்பர்கள் ஓடினர். தட்சிணாமூர்த்தியை விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே தட்சணாமூர்த்தி இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் பைக்கில் தப்பியது.
இதையறிந்த உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சடலத்தை பனப்பாக்கம்-அரக்கோணம் சாலை மேட்டு வேட்டாங்குளத்தில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஏடிஎஸ்பி குணசேகரன், நெமிலி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்தனர். அப்போது, கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க விடமாட்டோம்’ எனக்கூறி, 50க்கும் மேற்பட்டோர் திடீரென டீசலை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.