திருப்போரூர்: நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மின் கட்டண மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. அம்மாப்பேட்டை கிராமத்தில் 110 கிலோ வாட் திறன்கொண்ட மின் வழங்கல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது.
இப்பணியில் மின் பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், நெல்லிக்குப்பம் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. இதன் காரணமாக நெல்லிக்குப்பம் மின் நிலையத்தில் மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு பெறும் விண்ணப்பங்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இதனால் புதிய மின் இணைப்பு கோரியும், மின் கட்டணம் செலுத்தவும் திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு நேர விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படுவதை தவிர்க்க, நெல்லிக்குப்பம் மின் வழங்கல் நிலையத்தில் புதிய உதவி செயற்பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்றும், மின் கட்டண செலுத்தும் மையம், புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அளிக்கும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.