சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியிடம் நெருக்கமாக பழக்கம் ஏற்படுத்தி கொண்டு, அவரின் நிர்வாண படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1.50 லட்சம், 12 சவரன் நகையை மிரட்டி வாங்கிய நெல்லை ஆசாமியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் வேல்முருகன் (22). ஐடி எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளார். இவருக்கும், சென்னை அருகே மறைமலைநகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கும் ஒன்றரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்து வருகிறது. இவர்கள் ஆரம்பத்தில் நண்பர்களாக செல்போனில் பிரீ பையர் கேம் விளையாடி வந்தனர்.
இந்த விளையாட்டுக்கு பணம் தேவை என கூறி மாணவியிடம் அடிக்கடி பணம் பெற்றுள்ளார். அத்துடன் நிற்காமல் மாணவியை மிரட்டி பணத்துக்கு பதில் வீட்டிலிருந்த 12 சவரன் நகைகளை கூரியர் மூலம் பல தவணைகளாக பெற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பெண்ணின் பெற்றோருக்கு வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மகளை அழைத்து விசாரித்தனர். அப்போதுதான் அந்த பிளஸ்1 மாணவி நடந்த விவரங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், மகளின் செல்போனை வாங்கி போட்டோக்களை பார்த்துள்ளனர்.
இருவரும் மாறி மாறி நிர்வாண படங்களை அனுப்பி வைத்துள்ள அதிர்ச்சி காட்சியை பார்த்து உறைந்தனர். மேலும், நிர்வாணமாக நின்றபடி வீடியோ காலில் பேசிய காட்சிகளும் செல்போனில் இருந்தது. இந்த நிர்வாண காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.1.50 லட்சம் தர வேண்டும் என்று கூறி மாணவியை மிரட்டி பெற்றுள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். கூடுவாஞ்சேரி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், எஸ்.ஐ.மோகன்ராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் திருநெல்வேலியை சேர்ந்த வாலிபர் வேல்முருகனை கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, வேல்முருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுபோன்று பல மாணவிகளிடம் ஆசை வார்த்தைகளை கூறியும், ஆபாச படங்களை அனுப்பி வைத்து பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளாரா என்பது குறித்து ேபாலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.