பந்தலூர் : நெல்லியாளம் நகராட்சி பந்தலூரில் சுற்றித் திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் கட்டி வைத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம்,பந்தலூர் பஜார் மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆடு,மாடுகள்,வளர்ப்பு எருமைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சுற்றித்திரியும் மாடுகள் கடைகள் மற்றும் பஸ் ஸ்டாண்டில் தங்கி கழிவுகளை இட்டுச் செல்வதால் அதனை சுத்தம் செய்வதற்கு முடியாமல் நகராட்சி தூய்மை பணியார்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பந்தலூர் பஜார் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் பஜார் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்து சம்மந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.