Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூருக்கு புறப்பட்டு சென்றார் கருவூர் சித்தர்: நாளை சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்வு

நெல்லை: நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று நள்ளிரவில் நெல்லையப்பரிடம் கோபித்து கொண்டு கருவூர் சித்தர் மானூருக்கு புறப்பட்டு சென்றார். நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆவணி மூலத் திருநாள் கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி வீதியுலா மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சிகொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்வு மானூர் அம்பலவாணர் திருக்கோயிலில் நாளை நடக்கிறது.

இதையொட்டி நேற்று இரவில் கருவூர் சித்தர் மானூருக்கு ேகாபித்து கொண்டு செல்லும் நிகழ்வு நெல்லையப்பர் கோயிலில் நடந்தது. சூரியன் அருளால் கீரனூரில் பிறந்த கருவூர் சித்தர், சிவதலங்களுக்கு எல்லாம் சென்று நல்வரங்கள் பெற்றுவிட்டு, நெல்லையை வந்தடைந்தார். நெல்லையப்பரை தரிசிக்க கருவூர் சித்தர் டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தபோது, சுவாமியிடம் மறுமொழி ஒன்றும் கிடைக்காததால் வெகுண்டெழுந்து நெல்லையப்பருக்கு சாபமிட்டுவிட்டு, மானூருக்கு சென்றார். இந்நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் நேற்று இரவு கருவூர் சித்தர் நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று ‘நெல்லையப்பா, நெல்லையப்பா’ என அழைக்க சித்தாின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக நெல்லையப்பர் செவிசாய்க்காமல் இருந்ததார்.

இதனால் கோபமடைந்த சித்தர் ‘எருக்கு ஏழுக ஈசன் இங்கு இல்லை’ என சாபம் கொடுத்து விட்டு, ரதவீதிகளில் வீதியுலா சென்று நெல்லையை அடுத்த மானூர் அம்பலவாண சுவாமி கோவிலுக்கு சென்றடையும் நிகழ்வு நேற்று நள்ளிரவில் நடந்தது. இதையடுத்து இன்று இரவு நெல்லையப்பர், சந்திரசேகர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், அகஸ்தியர், தாமிரபரணி அம்பாள், குங்குலிய கலய நாயனார் ஆகியோர் சூழ பல்லக்கிலும், சப்பரத்திலும் சங்கரன்கோவில் சாலையில் மானூர் செல்கின்றனர். நாளை காலை 7.30 மணிக்கு நெல்லையப்பர் பேரொளியாய் சித்தருக்கு காட்சி கொடுக்கிறார். இதனால் மனம் மகிழ்ந்த சித்தர் ‘எனக்கு காட்சி கொடுத்த ஆவணி மூல திருநாள் அன்று ஒவ்வொரு வருடமும் காட்சி தர வேண்டும்’ என இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு நடக்கிறது.