*தேரோட்டத்திற்கு தயார்
நெல்லை : நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலின் சுவாமி, அம்பாள் தேர்களுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பிலான புதிய வடக் கயிறுகள் சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட பிறகு பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை டவுனில் உள்ள பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா, வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூலை 8ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
தேரோட்டத்திற்காக நெல்லையப்பர் கோயிலில் உள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களை சுத்தப்படுத்தி தேரோட்டத்திற்கு தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமையை கொண்டது, சுவாமி நெல்லையப்பர் தேர். இதன் எடை 450 டன்னாகும். 82 அடி உயரமும், 28 அடி அகலமும் கொண்டதாகும். தேரோட்டத்தின் போது 7 அடுக்கு சட்டங்கள் கட்டப்பட்டு, தேர் பதாகைகள் அலங்காரத்துடன் ரதவீதிகளில் கம்பீரமாக சுவாமி, அம்பாள் தேர் உள்பட 5 தேர்கள் உலா வரும்.கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது சுவாமி தேரின் வடங்கள் 4 முறை அறுந்து போனது.
இதனால் திருச்செந்தூரில் இருந்து தேர் வடங்கள் கொண்டு வரப்பட்டு, தேரோட்டம் நடந்தது. இதையடுத்து சுவாமி, அம்பாள் தேருக்கு புதிய வடங்கள் வாங்க பக்தர்கள் வலியுறுத்தினர்.
அதன்படி ரூ.6.50 லட்சம் மதிப்பில் 24 இஞ்ச் சுற்றளவும், 250 அடி நீளமும் கொண்ட 6 வட கயிறுகள் கடந்த மாதம் வாங்கப்பட்டு நெல்லையப்பர் கோயில் சுவாமி தேருக்கு 4 வடமும், அம்பாள் தேருக்கு 2 வடமும் கொண்டு வரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தேரோட்டத்திற்காக சுவாமி, அம்பாள் தேருக்கு வடக் கயிறுகளை பொருத்தும் பணி சிறப்பு வழிபாட்டுக்கு பின் நேற்று நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு வடங்களை தூக்கி பிடித்து தேரில் பொருத்தினர்.
டவுனில் போக்குவரத்து மாற்றம்
நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஜூலை 8ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் ரதவீதிவலம் நடைபெறும். தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயில் வாசல் சொக்கப்பனை முக்கு அருகே சாலை மூடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேட்டை, டவுன், குற்றாலம் செல்லும் வாகனங்கள் சொக்கப்பனை முக்கில் திரும்பி தெற்கு மவுண்ட் ரோட்டில் பயணித்து காட்சி மண்டபம் சென்று அங்கிருந்து தென்காசி, பேட்டை, முக்கூடல் வழியாக வாகனங்கள் செல்லவேண்டும் என மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி பேனர்கள் வைத்துள்ளனர்.