Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்: பிரம்பால் தாக்கி, செருப்பை வீசும் வீடியோ வைரல்; மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை

நெல்லை: நெல்லை, புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் ‘ஜல்’ நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே பிரபல நீட் பயிற்சி மையத்தில் வேதியியல் பாடப்பிரிவில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இதனால் நெல்லை மற்றும் நெல்லை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை இங்கு சேர்த்துள்ளனர். ஒவ்வொரு மாணவரிடமும் ஆண்டு பயிற்சி கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த பயிற்சி மையத்தில் வார்டனாக பணி புரிந்த அமீர் உசேன் என்பவர் கடந்த அக்.1ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை. அவர் பயிற்சி மைய மாணவர்கள் அதிக தேர்ச்சி விகிதத்தை அடைய சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக வீடியோ ஆதாரங்களுடன் சமீபத்தில் நெல்லை, மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் அந்த நீட் பயிற்சி மையத்திற்கு கடந்த 13ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் 15ம் தேதி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அந்த பயிற்சி மைய உரிமையாளர் 5 மாணவர்களை பிரம்பால் தாக்கி விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் மாணவி ஒருவர் மீது செருப்பை தூக்கி எரியும் வீடியோவும் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்ததில், மாணவர்கள் படிக்காமல் அங்குள்ள நூலகம் அருகே தூங்கியதை கண்காணிப்பு கேமராவில் பயிற்சி மைய உரிமையாளர் கவனித்து 5 மாணவர்களை வரிசையாக வரவழைத்து பிரம்பால் தாக்கியுள்ளார். இதில் மாணவர்களுக்கு தோள் பட்டை, காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதுபோல் செருப்பை வரிசையில் போட வில்லை என்பதற்காக மாணவி ஒருவரின் செருப்பை எடுத்து சக மாணவர்கள் முன்னிலையில் அவரை நோக்கி எறிந்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் அகமத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், நெல்லையில் மனித உரிமை ஆணைய மனுக்கள் குறித்த விசாரணைக்காக முகாமிட்டிருந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேற்று மாலை திடீரென ஜல் நீட் பயிற்சி மையத்திற்கு நேரில் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் 4 மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் தாக்குதலில் காயமடைந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் போலீசாரிடம் வழக்கு விவரம் மற்றும் விசாரணை குறித்து கேட்டறிந்தார்.