நெல்லை: வீரவநல்லூர் அருகே சுடலைமாடசாமி கோயில் கொடை விழாவில் மனித தலையுடன் சாமியாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள உப்பூர் ஊர்க்காடு சுடலைமாடசுவாமி கோவிலில் சாம கொடை விழா நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சாம வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்று திரும்பிய சாமியின் தோளில் எரிந்த நிலையில் மனித தலை மற்றும் கை கால்கள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்ட சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி கிராம நிவாக அலுவலர் மனித தலையுடன் சாமியாடியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சுடலைமாடசுவாமி கோவிலில் மனித தலையுடன் சாமியாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.