நெல்லை: நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் 1வது தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் குமார் என்ற பண்ணையார் குமார் (44). இவர் அப்பகுதியில் செங்கல் சூளை, லாரி, டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று மாலை 5 மணி அளவில் தெற்கு வீரவநல்லூர் பகுதியில் உள்ள அவரது தோட்டத்திற்கு வீற்றிருந்தான்குளம் வழியாக பைக்கில் சென்ற போது, பின்னால் 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பலில் ஒருவர், குமார் தலையில் பாட்டிலை வீசினார். இதில் தலையில் அடிபட்டு நிலைகுலைந்த அவர் பைக்கிலிருந்து சரிந்து கீழே விழுந்தார். இதையடுத்து அந்த மர்ம கும்பல் குமாரை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு மர்மக் கும்பல் நோட்டமிடுவதும், பின்னர் அவரை பின் தொடந்து 3 பைக்குகளில் செல்வதும் தெரியவந்தது. அவ்வாறு 3 பைக்குகளில் சென்ற 5 பேர் குறித்து விசாரித்த போது, அவர்கள், வீரவநல்லூரை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (24), கண்ணன் (21), முத்துராஜ், வசந்த் என்ற கொண்டி (21), கொம்பையா (23) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட 5 பேரில் முதல் எதிரியான கார்த்திக், தச்சநல்லூரில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் கார்த்திக்கை தீவிரமாக காதலித்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை, வீரவநல்லூர் நண்பரான குமார் என்ற பண்ணையார் குமாரை தொடர்பு கொண்டு, கார்த்திக்கை பற்றி விசாரித்துள்ளார். அதற்கு குமார், ‘‘அவன் பெரிய ரவுடி. ஊதாரித்தனமாக சுற்றித் திரிகிறான். அவனுக்கெல்லாம் பெண்ணை கொடுத்து விடாதே.’’ என்று கூறினாராம். இந்தத் தகவல் அந்தப் பெண் மூலமாக கார்த்திக்கிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் பண்ணையார் குமார் மீது கார்த்திக் ஆத்திரம் அடைந்துள்ளார். தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய, பெண்ணின் தந்தை கீழிறங்கி வந்தும், குமார் தடுத்து விட்டாரே என்று நினைத்து அவரை தீர்த்துக் கட்ட நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அவர் பைக்கில் செல்லும் போது விரட்டிச் சென்று போடுவது தான் சரியாக இருக்கும் என்று கணித்து, நேற்று மாலை பண்ணையார் குமார் தோட்டத்திற்கு செல்லும் போது, அவரை நண்பர்களுடன் சேர்ந்து 3 பைக்குகளில் விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்றது, தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக், கண்ணன், முத்துராஜ், வசந்த், கொம்பையா ஆகிய 5 பேரையும் வீரவநல்லூர் போலீசார் கைது செய்தனர்.