நெல்லை : நெல்லை டவுனில் பாதாள சாக்கடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் நெல்லையப்பர் கோயில் பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை டவுனில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, நெல்லையப்பர் கோயில் பிரதான சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, இந்த சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளது. முன்னதாக, நயனார்குளம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், அங்கு இயங்கி வந்த நயினார் குளம் மொத்த காய்கறி சந்தைக்கு வரும் கனரக வாகனங்கள் பேட்டையில் உள்ள லாரி முனையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
தற்போது நெல்லையப்பர் கோயில் பிரதான சாலை மூடப்பட்டுள்ளதால், இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தெற்கு மாவுண்ட் சாலை வழியாக செல்ல டவுன் ஆர்ச் பகுதியில் திருப்பி விடப்படுகின்றன.
தற்போது இருசக்கர வாகனங்கள் மட்டும் இந்த சாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்போது, இந்த சாலையில் முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க வழிவகை செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.