*மானூர் வட்டார பயணிகள் தவிப்பு
மானூர் : நெல்லை-சங்கரன்கோவில் 4 வழிச்சாலையில் இருளில் மூழ்கிய பஸ் நிறுத்தங்களால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். நெல்லையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் 4 வழிச்சாலையில் அதிகமான குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள்நெடுஞ்சாலையிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் உள்பகுதியில் அமைந்திருப்பதால் பேருந்து நிறுத்தங்கள் ஊரின் விலக்குப்பகுதியில்அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நகர பஸ் மற்றும் மொபசல் பேருந்துகள் மட்டும் நின்று செல்கின்றன.
இச்சாலையில் சேதுராயன்புதூர், கோரிப்பகுதி, நரியூத்து கரம்பை, மாவடி, குத்தாலப்பேரி, கானார்பட்டி, பிள்ளையார்குளம், செட்டிகுறிச்சி, சுப்பையாபுரம் போன்ற மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதில் சேதுராயன்புதூர், ரஸ்தா பகுதியில் தொழிற்சாலை அதிகமாக இருப்பதால் அங்கு வேலை செய்யும் பெண்கள் மாலையில் பணி முடிந்து இரவு 7மணி முதல் 9மணி வரை இருளில் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர்.
சில பேருந்து நிறுத்தங்களில் பெண்கள் தனியாகவும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. இப்பேருந்து நிறுத்தங்கள் அருகில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் பாதுகாப்பின்றி தவிப்புக்குள்ளாகின்றனர். மேலும் குடிமகன்களும் பஸ் நிறுத்தத்தை அவ்வப்போது ஆக்கிரமிக்கின்றனர்.
இதனால் பெண்கள் அங்கு நிற்க அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து காட்டுப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ள பஸ் நிறுத்தங்களில் மின்விளக்குகள் அல்லது சூரிய மின்விளக்குகள் அமைத்து பயணிகளின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.