நெல்லை, ராதாபுரம், தனக்கர்குளத்தைச் சேர்ந்தவர்களான சேர்மத் துரையும், அவரது தம்பி லிங்கதுரையும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்களில் காய்கறிகளை ஏற்றிச் சென்று மார்க்கெட்டுகளில் இறக்கித் தரும் தொழிலைச் செய்தவர்கள். இப்போது அந்தப் பகுதியில் முன்மாதிரி விவசாயிகளாக மாறி இருக்கிறார்கள். அப்படி என்னதான் செய்தார்கள்? நாங்களும் அந்த ஆச்சரியத்தோடு இந்த சாதனை சகோதரர்களைச் சந்தித்தோம். ‘‘நாங்கள் இருவரும் பட்டப்படிப்புகள் படிக்கவில்லை. எங்களது அப்பா விவசாய வேலைகள் செய்வார். நாங்களும் அவருடன் சிறுவயதில் விவசாய வேலைகளில் ஈடுபடுவோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை டிராக்டர், டெம்போ உள்ளிட்ட வாகனங்களை இயக்கி விவசாயம் சார்ந்த ஒரு உப தொழிலை செய்து வந்தோம். அந்த சமயத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வோம். காய்கறிகளின் தேவையும், அதில் கிடைக்கும் வருமானமும் எங்களை அந்தத் தொழிலை நோக்கி இழுத்தது. எங்களிடமிருந்த சில வாகனங்களை அடகு வைத்து சுமார் ரூ.45 லட்சம் புரட்டினோம். அதையே மூலதனமாக வைத்து எங்களது 20 ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயத்தைத் தொடங்கினோம். மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதிலும் விவசாயம் செய்தோம். அப்போது எங்களிடம் நம்பிக்கையைத் தவிர வேறு எதுவுமில்லை. ஆனால் தற்போது ரூ.2 கோடி முதலீடு செய்யும் அளவிற்கு விவசாயம் எங்களை வளர்த்தெடுத்து இருக்கிறது.
காய்கறி விவசாயத்தைப் பொறுத்தவரை ஒரே வகையான காய்கறிகளை மட்டுமே பயிரிட்டாலும் நமக்கு எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்காது. அதனால் சுழற்சி முறையில் வெவ்வேறு வகையான பயிர்களைப் பயிரிட வேண்டும். நாங்கள் தற்போது வெள்ளரி, புடலை, கத்தரி ஆகிய காய்கறி வகைகளையும், வாழையும் பயிரிட்டு இருக்கிறோம். இதைத்தவிர 5 ஏக்கரில் கேந்தி பயிர் செய்திருக்கிறோம். இதில் 2.5 ஏக்கரில் கேந்தி மகசூல் நடக்கிறது. வழக்கமாக நல்ல மகசூல் காலங்களில் ஒரு நாளைக்கு 400 கிலோ வரை கேந்தி உற்பத்தியாகி இருக்கிறது. அடுத்த 2.5 ஏக்கர் கேந்திச்செடிகள் மகசூலுக்கு தயாராகி வருகின்றன. கேந்தியைப் பொறுத்தவரை தற்போது கிலோ ரூ.30 – 35 வரையில் விற்பனையாகிறது.
இந்த விலையானது நாம் கேந்தி பயிரிட செலவிட்ட தொகைக்கும், பணியாளர் களின் சம்பளத்திற்குமே சரியாக இருக்கும். ஆனால் அது முக்கியமல்ல, சுழற்சி முறையில் பயிரிடுவதுதான் முக்கியம்.2 ஏக்கரில் கத்தரி வைத்திருக்கிறோம். 3 ஆயிரம் வாழை மரம் வைத்திருக்கிறோம். ஏற்கனவே பயிரிட்டுள்ள மிளகாய் இன்னும் 10 நாட்களில் மகசூலுக்கு வரும். வாழைத்தார்கள் இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு ஏதுவான பருவ நிலையை அடையும். இதுபோன்று விவசாயம் செய்யும்போது பயிர்களை சுழற்சி முறையில் காலநிலைகளுக்கு ஏற்ப திட்டமிட்டு பயிரிட்டால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம். எங்கள் பகுதியில் குளத்துநீர்ப் பாசனம் கிடையாது. தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாயத்தில் இறங்கும்போதே சொட்டுநீர்ப் பாசனம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடுதான் இருந்தோம். அப்போது ரூ.11.5 லட்சம் செலவில் சொட்டுநீர்ப் பாசனக் கட்டமைப்புகளை அமைத்தோம். இதில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் எங்களுக்கு கிடைத்த ரூ.3.5 லட்சம் மானியம் உதவியாக இருந்தது. இதுபோல் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஏக்கர் நிலத்திற்கு சொட்டுநீர்ப் பாசனத்திற்காக மட்டுமே ரூ.50 லட்சம் செலவு செய்தோம்.
இதில் 50 சதவீதத் தொகை தோட்டக்கலைத்துறையின் மானியத்தின் மூலம் கிடைத்தது. அதுதவிர புடலை பந்தல் அமைக்க ரூ.13 லட்சம் செலவானது. இதற்கு ரூ.2.15 லட்சம் மானியம் கிடைத்தது. புடலையைப் பொறுத்தவரை 65வது நாள் முதல் நாம் மகசூல் எடுக்கலாம். சுமார் 70 நாட்கள் தொடர்ந்து மகசூல் கிடைக்கும். அதிகபட்சம் 50 டன் கிலோ புடலை மகசூல் செய்து இருக்கிறோம். அதனால் புடலை பந்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.பொதுவாக காய்கறிப் பயிர்களில் 50 முதல் 70 நாட்களில் மகசூல் எடுக்கலாம். காய்கறி விளைச்சலில் எதிர்பார்த்த லாபத்தை ஒருமுறை விட்டால் இன்னொரு முறை பெறலாம். இதில் பெரும்பாலான விவசாயிகள் உற்பத்திப் பொருளின் விலை சந்தையில் குறைந்த உடனேயே அதிருப்தி அடைகிறார்கள். பராமரிப்பையும் விட்டுவிடுகிறார்கள். அதன்பிறகு விலை அதிகரிக்கும்போது எதிர்பார்த்த உற்பத்தி பெற முடியாமல் திணறுகிறார்கள். அதனால் விலை ஏறினாலும், இறங்கினாலும் உங்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்திற்கு ஏற்ப விலை கிடைக்கும். நஷ்டத்தை ஓரளவு சமாளிக்க முடியும். காய்கறியை விவசாயத்தை கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும். சரியான பராமரிப்பை மேற்கொண்டால் கை நிறைய வருமானம் கிடைக்கும்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார்கள்.
தொடர்புக்கு
லிங்கதுரை – 80726 01232