நெல்லை: நெல்லை மேலப்பாளையம், அத்தியடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் முகம்மது ரஹ்மத்துல்லா (26). இவர் மணிமுத்தாறு சிறப்பு காவல் படை, 9வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. அவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் பாளை. வஉசி விளையாட்டு மைதானத்தில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். அப்போது அங்கு வாலிபரிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டது. அவர்களை முகம்மது ரஹ்மத்துல்லா தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் அவரது கையில் வெட்டி விட்டு தப்பினர். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குபதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பாளை., குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். ஒருவர் மட்டும் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணையில், அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே வசவப்பபுரத்தைச் சேர்ந்த ஹரிசுப்பிரமணியன் (21) என்பதும், போலீஸ்காரரை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. அவருடன் மதன் என்ற மாணிக்கசெல்வம் (19), பார்த்திபன் (20) பாளை, மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23), 16 வயது சிறுவன் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஹரிசுப்பிரமணியனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து முருகன் என்பவரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதும், அதை தட்டிக்கேட்ட போலீஸ்காரர் முகம்மது ரஹ்மத்துல்லாவை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இதற்கிடையே போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமாணி, சிகிச்சை பெற்றுவரும் காவலர் முகம்மது ரஹ்மத்துல்லாவை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவத்தில் காவலரை மதுபோதையில் தாக்கிய கும்பலை துரிதமாக செயல்பட்டு 9 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.