Tuesday, February 27, 2024
Home » நெல்லை மாவட்டத்தில் அறுவடை நேரத்தில் மழை வெள்ளத்தால் மஞ்சள் குலைகள் நீரில் மூழ்கி நாசம்

நெல்லை மாவட்டத்தில் அறுவடை நேரத்தில் மழை வெள்ளத்தால் மஞ்சள் குலைகள் நீரில் மூழ்கி நாசம்

by Lakshmipathi

*கண்ணீரில் மூழ்கிய விவசாயிகள்

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பின. மேலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்ததால் காட்டாற்று வெள்ளமும் அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீருடன் இணைந்து தாமிபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கரையோரத்தில் வசித்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் நெல்லை, பாளையங்கால்வாய், கன்னடியன் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் நிரம்பி ஓடியது. பாளையங்கால்வாயில் கரையை காண்டி தண்ணீர் பெருக்கெடுத்து விளைநிலங்களில் ஓடியது. மேலச்செவல் பழவூர் தாமிரபரணி அணைக்கட்டு பகுதியில் கால்வாயும், தாமிரபரணி ஆறும் ஒரேமட்டத்தில் காணப்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் வெகுவாக நிரம்பி உடைப்பு ஏற்பட்டது.

இதில் சிவட்டிபட்டி பகுதியில் உள்ள மணிமுத்தாறு பாசன குளமான நிஜாம் குளம் மழைவெள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் தற்போது மண்மேடாக காணப்படுகிறது. இதுபோல் நெல்லை அடுத்துள்ள அருகன்குளம் மேலூர் பகுதியில் அப்பகுதியில் உள்ள குளங்களில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ஓடையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தண்ணீர் அதிகரித்து ஓடியது. இதனால் அப்பகுதியில் உள்ள கோசலைக்கு செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக வெள்ள நீர் விளைநிலத்தில் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிர்செய்திருந்த வாழை, மஞ்சள்குலைகள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் குலைகள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியாத காரணத்தால் மஞ்சள் குலை செடிகள் பழுப்பு நிறத்துக்கு மாறிவிட்டன. அறுவடை செய்யும் நேரத்தில் மழை, வெள்ளம் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.

நாற்றுகள் அழுகின

நெல்லை அடுத்துள்ள செப்பறை ராஜவல்லிபுரம் அழகியகூத்தர் கோயில் பகுதியில் உள்ள விவசாய பயிர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் மடைகள் கனமழை வெள்ளத்தால் ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செப்பறை கோயிலுக்கு செல்லும் சாலையும் உடைபட்டு விவசாயிகள் நெல் நடவு செய்ய வைத்திருந்த நெல் நாற்றுகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. இந்த நாற்றுகள் அழுகி விட்டன. பணத்தை செலவளித்து நெல் நடவு செய்ய வளர்க்கப்பட்ட நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி சேதமானதால் இழப்பீடு எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

You may also like

Leave a Comment

1 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi