நெல்லை: நெல்லை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியார் மூலமாக ஒப்பந்தம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துவருகின்றனர். நெல்லை மாநகராட்சியில் சுமார் 1600 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 3 பிரிவுகளாக இங்கு பணிநியமனம் செய்யபட்டுள்ளனர். சுமார் 290 தூய்மை பணியாளர்கள் நேரடியாக மாநகராட்சியின் நிரந்தர ஊழியர்களாகவும், 46 சுயஉதவி குழுக்கள் மூலம் 753 தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியில் நேரடியாக ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது போக சுமார் 530 பேர் நேரடியாக 2 ஒப்பந்ததாரர்களின் கீழ் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக 46 சுயஉதவி குழுக்கள் மூலமாக பணியற்று 753 தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனமான ராம் அன்ட் கோ என்னும் ஒப்பந்த தாரர் வசம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக இந்த ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது மாநகராட்சி அலுவலக மெயின் கேட்டை மூடி முற்றுகையிட விடாமல் அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அவர்கள் மாநாகராட்சி முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.