சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி கொண்டாட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திரைப்பட குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து, லியோ திரைப்பட குழுவினர் பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வெற்றி கொண்டாட்டம் நடத்த முடிவு செய்தனர். அதற்காக பெரியமேடு காவல் நிலையத்தில் வெற்றி கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தனர்.
அந்த மனு மீது மாநகர காவல்துறை சில நிபந்தனைகளுடன் லியோ திரைப்பட குழுவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, நேரு உள் விளையாட்டு அரங்க இருக்கை அளவுக்கு தான் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். பார்க்கிங் வசதிக்கு ஏற்ப 200 முதல் 300 கார்கள் மட்டும் விட வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என 10க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளுடன் மாநகர காவல்துறை லியோ திரைப்பட வெற்றி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து நாளை நடக்கும் லியோ திரைப்பட வெற்றி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை திரைப்பட குழுவினர் செய்து வருகின்றனர்.