Wednesday, February 28, 2024
Home » எனது காதலை உதாசீனப்படுத்திவிட்டு வேறு ஒருவரை காதலித்ததால்… பெண் ஐ.டி இன்ஜினியரை சங்கிலியால் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன்: கை, கால் நரம்புகளையும் அறுத்தேன்

எனது காதலை உதாசீனப்படுத்திவிட்டு வேறு ஒருவரை காதலித்ததால்… பெண் ஐ.டி இன்ஜினியரை சங்கிலியால் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன்: கை, கால் நரம்புகளையும் அறுத்தேன்

by Ranjith

* கைதான பள்ளி தோழியான ‘திருநம்பி’ போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்

* பிறந்தநாள் சர்ப்ரைஸ் என்று தனியாக அழைத்து சென்று திட்டமிட்டு தீர்த்து கட்டியதும் விசாரணையில் அம்பலம்

சென்னை: எனது காதலை உதாசீனப்படுத்திவிட்டு வேறு ஒருவரை காதலித்ததால், பிறந்த நாள் அன்று சர்ப்ரைஸ் என்று பெண் மென்பொறியாளரை தனியாக அழைத்து சென்று சங்கிலியால் கட்டி கை மற்றும் கால் நரம்புகளை அறுத்துவிட்டு பிறகு பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றேன் என்று கைதான பள்ளி தோழியான திருநம்பி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகேயுள்ள தாழம்பூர் பகுதியில் கட்டுமான பணிகள் பாதியில் நின்ற நிலையில் உள்ள கட்டிடம் ஒருகே நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர், ‘‘அய்யோ காப்பாத்துங்க.. காப்பாத்துங்க….’’ என்று அலறும் சத்தம் கேட்டது.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு கட்டிடம் அருகே ஓடி வந்து பார்த்த போது, பெண் ஒருவர் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து பதறிய வாகன ஓட்டிகள், உடனே கட்டிடத்தின் அருகே இருந்த மணல் மற்றும் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் சங்கிலியால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் வாகன ஓட்டிகளால் அவரை உடனே மீட்க முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்படி கேளம்பாக்கம் உதவி கமிஷனர் வெங்கடேசன், தாழம்பூர் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பாதி எரிந்த நிலையில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் போதே போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூற முயன்றுள்ளார். ஆனால் அவரால் சரியாக பேச முடியவில்லை என்றாலும், கடும் வலியை தாங்கிக்கொண்டு, வெற்றி…. வெற்றி…. என கூறி செல்போன் நம்பர் ஒன்றை கூறியுள்ளார்.

அதை போலீசார் ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டனர். பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் போதே சிறிது நேரத்தில் அவர் மயக்க நிலையை அடைந்தார். இதைதொடர்ந்து மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்ததும், டாக்டர்கள் இளம்பெண்ணை சோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பிறகு தாழம்பூர் போலீசார் இறப்பதற்கு முன்பு இளம்பெண் கூறிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். எதிர்முனையில் பேசிய நபர், தான் வெற்றிமாறன் என்றும், பெருங்குடியில் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

தீயில் எரிந்த இளம்பெண் குறித்து போலீசார் கேட்ட போது, யார் என்று தெரியவில்லை என்று கூறி தாம் நேரில் வருவதாக கூறினார். பிறகு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு வந்து தீயில் எரிந்து உயிரிழந்த இளம் பெண் உடலை பார்த்து. இது எனது தோழி நந்தினி என்று கூறி அழுதுள்ளார். வெற்றிமாறனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரை கண்காணித்தனர். இளம்பெண் எரிக்கப்பட்ட கட்டிடத்தின் அருகே பை ஒன்றை போலீசார் கைப்பற்றி இருந்தனர். அதில் நந்தினியின் போன் இருந்தது.

அந்த செல்போனை போலீசார் கைப்பற்றி சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன், கடைசியாக நந்தினியிடம் பேசிய நபர் யார் யார், நந்தினியுடன் யாரேனும் வந்தார்களா என செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்த போது, நந்தினியுடன் சம்பவம் நடந்த கட்டிடத்தின் அருகே வெற்றிமாறன் இருந்ததற்கான செல்போன் சிக்னல் இருந்தது. போலீசாருக்கு தன் மீது சந்தேகம் வந்ததை அறிந்த வெற்றிமாறன் உடனே அங்கிருந்து போக முயன்றார். ஆனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

நான் நந்தினியுடன் பெருங்குடியில் பணியாற்றி வருகிறேன். கொடுங்கையூர் அருகே உள்ள மப்பேடு பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். உடனே போலீசார் நாங்கள் போன் செய்த போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று கேட்டதும், வீட்டில் இருந்ததாக கூறினார். அப்போது போலீசார், நாங்கள் போன் செய்த 15 நிமிடங்களில் நீ வந்துவிட்டாய். மப்பேடு பகுதியில் இருந்து இவ்வளவு சீக்கிரம் யாராலும் வரமுடியாதே என்று கேட்டனர். அப்போது வெற்றிமாறன் பதில் சொல்ல முடியாமல் உளறினார். பிறகு நான்தான் நந்தினியை பெட்ரோல் ஊற்றி கொன்றேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தீவிர விசாரணைக்கு பின் தான் வெற்றிமாறன் ஆண் இல்லை என்பதும், அவர் மதுரை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டி முருகேஸ்வரி (25) என்ற பெண் என்பதும் தெரியவந்தது. இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ‘திருநம்பி’ என்றும் அதன்பிறகு தனது பெயரை வெற்றிமாறன் என்று மாற்றிக்கொண்ட விவரங்களும் போலீசாருக்கு தெரியவந்தது. அதைதொடர்ந்து தாழம்பூர் போலீசார் பாண்டி முருகேஸ்வரி (எ) வெற்றிமாறன் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பகுதி செய்து கைது செய்தனர். விசாரணையின் போது வெற்றிமாறன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். அவருக்கு மனைவி ஜெயலட்சுமி மற்றும் அமுதா மற்றும் நந்தினி ஆகிய இரண்டு மகள்கள். ரவீந்திரன் மதுரையில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் அமுதா பெற்றோருடன் உள்ளார். இளைய மகள் நந்தினி (25) மதுரையில் உள்ள தியாகராயர் கல்லூரியில் எம்.காம் முடித்துள்ளார். நந்தினியும், வெற்றிமாறனும் பள்ளி பருவத்தில் இருந்து ஒன்றாக படித்து வந்துள்ளனர். எரித்து கொலை செய்யப்பட்ட நந்தினியும் பாண்டி முருகேஸ்வரி (எ) வெற்றிமாறனும் பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாக் படித்தவர்கள். நந்தினி 2021ம் ஆண்டு சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் உருவாக்கும் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார். கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போதே பாண்டி முருகேஸ்வரி, நந்தினியிடம் தனது உடல் நிலை மாற்றங்கள் மற்றும் தனது ஆசைகள் குறித்து கூறியுள்ளார். 2019ம் ஆண்டே பாண்டி முருகேஸ்வரி தனது பெயரை ‘வெற்றிமாறன்’ என்று மாற்றிக்கொண்டார். தனது உடை, தலைமுடியை ஆண்கள் போலவும் மாற்றினார். 2019ம் ஆண்டு இறுதியில் தனக்கு தெரிந்த திருநம்பிகள் மூலம் மும்பைக்கு சென்று ஆணாக மாற அறுவை சிகிச்சை செய்ய முயற்சி செய்துள்ளார். கடைசியில் நந்தினி தான் அதை தடுத்துள்ளார்.

நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று கூறி அறுவை சிகிச்சை முயற்சியை தடுத்துள்ளார். வெற்றிமாறன் திருநம்பியாக மாறி இருந்தாலும், இருவரும் பள்ளி தோழிகள் என்பதால் நந்தினியின் பெற்றோர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனிடையே வெற்றிமாறன், நானும் சென்னைக்கு வந்து உன்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று நந்தினியிடம் கூறியுள்ளார். அதன்படி நந்தினி, பெருங்குடியில் தான் பணியாற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளிடம், வெற்றிமாறன் குறித்து பேசி அவரை வேலைக்கு எடுத்துள்ளார். அதன் பிறகு ஒரே நிறுவனத்தில் யாருக்கும் சந்தேகம் வராதபடி, பாண்டி முருகேஸ்வரி, வெற்றிமாறனாகவே பணியாற்றி வந்தார்.

நந்தினியிடம் நான் பெண்ணாக இருந்து திருநம்பியாக மாறியதால், எனக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள். நீ தான் எனக்கு கடைசி வரையிலும் துணையாக இருக்கணும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நந்தினிக்கு பள்ளிக்கரணையை சேர்ந்த ராகுல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் நந்தினி வார இறுதி நாட்களில் தனது தோழியான வெற்றிமாறனுடன் செல்வதை விட்டுவிட்டு, காதலன் ராகுலுடன் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இது வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து வெற்றிமாறன் 6 மாதங்களுக்கு முன்பே நந்தினியை கடுமையாக எச்சரித்துள்ளார்.இருந்தாலும், நந்தினி, ‘நீ எனது உயிர் தோழி, ராகுல் எனது காதலன், நான் அவரை தான் திருமணம் செய்ய போகிறேன்.

உன்னுடனான நட்பு சாகும் வரையில் இருக்கும்’ என்று வெற்றிமாறனிடம் கூறியுள்ளார். ஆனால் வெற்றிமாறன், நந்தினியிடம் ‘இல்லை, என்னை பற்றி உனக்கு தான் முழுமையாக தெரியும். இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே சந்தோசமாக வாழலாம்’ என்று கூறியுள்ளார். அதற்கு நந்தினி, ‘நீ எனது தோழி, என் ஆசைகளை நீ எப்படி பூர்த்தி செய்ய முடியும், எனது ஆசையை ஒரு ஆணால் மட்டும் தான் பூர்த்தி செய்ய முடியும்’ என்று கூறி வெற்றிமாறனிடம் இருந்து விலகியுள்ளார். இருவரும் கடந்த 3 மாதங்களாக ஒருவரோடு ஒருவர் பேசாமல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் நந்தினிக்கு நேற்று 25வது பிறந்தநாள். எனவே கடந்த 22ம் தேதி இரவே வெற்றிமாறன், நந்தினிக்கு போன் செய்து. ‘எனது கடைசி விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும். ஒரு நாள் முழுவதும் என்னுடன் வெளியே வரவேண்டும். அதன் பிறகு நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். உன் காதலனுடன் நீ சந்தோசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். அதற்கு நந்தினி சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி வெற்றிமாறன் நேற்று முன்தினம் காலை நந்தினியை ஸ்கூட்டரில் பெசன்ட் நகர் பீச், வேளாங்கண்ணி மாதா கோயில், அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பிறகு கோவளம் வந்து சிறிது நேரம் கடற்கரையில் விளையாடி விட்டு, நேராக கேளம்பாக்கம் வழியாக பொன்மார் பகுதிக்கு சென்றுள்ளனர்.

நடுவழியில் வெற்றிமாறன். பிறந்த நாள் என்பதால் ‘உனக்கு ஒரு ‘சர்ப்ரைஸ் கிப்ட்’ தருகிறேன்’ என்று கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத கட்டுமான பணிகள் முடியாமல் பாதியில் நிற்கும் ஒரு கட்டிடத்தின் அருகே அழைத்துச் சென்றுள்ளார். கட்டிடத்திற்குள் சென்றதும், முன்னால் சென்ற நந்தினியை திடீரென ஒரு கட்டையால் சரமாரி தாக்கி கீழே தள்ளி உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் வெற்றிமாறன், ஏற்கனவே திட்டமிட்டப்படி தனது பையில் கொண்டு வந்த நாய் சங்கிலியை எடுத்து, நந்தினியின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, சத்தம் போடாதே… ‘நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்.

இடையில் வந்த ராகுலுக்கு நீ சொந்தம் இல்லை. பள்ளி பருவத்தில் இருந்து நீ என்னுடன் இருக்கிறாய், இப்போது கடைசியாக கேட்கிறேன் என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா முடியாதா? என்று கேட்டுள்ளார். அதற்கு நந்தினி, ‘நான் ராகுலுடன் தான் வாழ்வேன். ஒரு பெண்ணுடன் நான் வாழ மாட்டேன்’ என்று ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமாறன், கையில் வைத்திருந்த கத்தியால் தனது உயிர் தோழி என்றும் பாராமல் நந்தினியின் கை மற்றும் கால் நரம்புகளை அறுத்துள்ளார். வலியால் சத்தம் போடவே நந்தினியின் கழுத்தின் இடது பகுதியிலும் அறுத்துள்ளான்.

இதில் ரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் நந்தினி துடித்துள்ளார். ‘கடைசியாக மறுபடியும் கேட்கிறேன். எனக்கு நீ தான் வேண்டும் என்ன சொல்கிறாய்…..’ என்று வெற்றிமாறன் கேட்டுள்ளார். ‘என் உயிர் போனாலும் உன்னை நான் திருமணம் செய்ய மாட்டேன்’ என்று நந்தினி கூறியுள்ளார். அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் வெற்றிமாறனிடம் போராட முடியாமல் நந்தினி துடித்தார். அப்போது ஆத்திரம் தீராத வெற்றிமாறன்…

‘நீ செத்துபோ…டி’ என்று கூறி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை நந்தினியின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். நந்தினியை கொலை செய்தது நான் தான் என்று போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நோக்கில் தான், போலீசார் அழைத்ததின் பேரில் வெற்றிமாறன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்திய செல்போனால் அவர் வசமாக சிக்கி கொண்டார்.  இவ்வாறு கைது செய்யப்பட்ட வெற்றிமாறன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* வெற்றிமாறன் என பெயர் தேர்வு செய்தது ஏன்?
கைது செய்யப்பட்ட பாண்டி முருகேஸ்வரி மதுரையில் படிக்கும் போதே தனது தோழியான நந்தினியுடன் வீட்டிற்கு தெரியாமல் சினிமா பார்ப்பது வழக்கம். குறிப்பாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்தை பாண்டி முருகேஸ்வரி விடாமல் பார்த்து வந்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் கலைப்படப்புகளால் பாண்டிமுருகேஸ்வரி ஈர்க்கப்பட்டார். அதேநேரம் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் நேரத்தில் என்ன பெயர் வைக்கலாம் என பாண்டிமுருகேஸ்வரி தனது உயிர் தோழியான நந்தினியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு உனக்கு இயக்குநர் வெற்றிமாறன் படைப்புகள் பிடிக்கும் என்பதால் ‘வெற்றிமாறன்’ என்று அவரது பெயரையே வைத்துக்கொள் என நந்தினி தெரிவித்துள்ளார். தனது காதலியான நந்தினி தேர்வு செய்த பெயர் என்பதால், பாண்டி முருகேஸ்வரி திருநம்பியாக மாறிய பிறகு தனது பெயரை வெற்றிமாறன் என மாற்றிக் கொண்டதாக விசாரணையின் போது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi