கோவை: மத கலவரம், மத சாயம் ஆகியவற்றை மட்டுமே பாஜ நம்பி உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறினார். கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி வழிகாட்டுதலோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது. நெல்லிக்காய்போன்று சிதறும் கூட்டணி அல்ல, இது எக்கு கூட்டணி. பாஜ மக்களை நம்பி இல்லை. மதக் கலவரம், மத சாயம் ஆகியவற்றை மட்டுமே நம்பி உள்ளது. பாஜ மற்றும் அதிமுகவின் பகல் கனவு பலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாஜவை தமிழ் மண் புறக்கணிப்பது உறுதி.
தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.2,350 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. முருகன் மாநாடு நடத்தினால் மட்டும் முருகன் அவர்களை மன்னித்து விடுவாரா?. ஒருபோதும் மன்னிக்க மாட்டார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜவை தமிழ் கடவுள் முருகன் சூரசம்ஹாரம் செய்து விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.
விளம்பு நிலை மக்கள் ஆங்கிலம் பேசுவது அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லை
செல்வப்பெருந்தகை கூறுகையில், ‘விளிம்பு நிலை மக்கள் ஆங்கிலம் பேசுவது அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லை. ஆங்கிலம் பேசினால் அவமானம், ஒவ்வாத மொழி என்பதனை மக்கள் ஏற்க மாட்டர்கள். அவரது மகனே ஆங்கிலேயர் ஏற்படுத்திய கிரிக்கெட்டில் தலைவராக உள்ளார்’ என்றார்.