Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நீட் தேர்வும்.. குளறுபடிகளும்...

நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வ கல்​லூரி​களில் எம்​.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி ஆகிய​வற்​றில் இளநிலை படிப்​பு​களுக்​கும், கால்​நடை மருத்​து​வ படிப்​பில் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இளநிலை படிப்​பு​களுக்​கும், ராணுவ நர்​சிங் கல்லூரி​யில் பி.எஸ்​சி. நர்​சிங் படிப்​புக்​கும் நீட் நுழைவுத் தேர்​வில் தேர்ச்சிபெற வேண்​டியது அவசி​யம். இந்த தேர்​வில் பெறும் மதிப்​பெண் அடிப்​படை​யிலேயே மாணவர் சேர்க்​கை​ நடக்கிறது. 2025-26-ம் கல்​வி​யாண்டு மருத்​து​வப் படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத் தேர்வை எழுது​வதற்கு நாடு முழு​வ​தி​லும் இருந்து 22 லட்​சத்து 70 ஆயிரம் மாணவர்கள் விண்​ணப்​பித்து இருந்​தனர்.

இந்​தி​யா​விலும், 13 வெளி​நாடு​களில் உள்ள நகரங்​களி​லும் 5 ஆயிரத்து 453 தேர்வு மையங்​கள் அமைக்​கப்​பட்டு இருந்​தன. ஆனால், நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வருகை பதிவாகும். இது நீட் தேர்வு மீதான மாணவர்களின் மோகம் குறைந்து வருவதை காட்டுகிறது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், உயிரை மாய்த்துக் கொண்டதையும் தமிழ்நாடு இன்றளவும் மறக்கவில்லை.

கடந்த ஆண்டு நீட் தேர்வு வினா தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் அரங்கேறிய நிலையில் இந்தாண்டு அவற்றை தடுக்க தேசிய தேர்வு முகமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் அதையும் மீறி பல மோசடிகளும், குளறுபடிகளும் அரங்கேறி வருகிறது. நீட் வினாத்தாளை ரூ.40 லட்சத்துக்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் ராஜஸ்தானில் சிக்கியது. இதே போல ஆள்மாறாட்டம் செய்தும் பல்வேறு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தர மாணவர்களிடம் தலா ரூ.20 லட்சம் வாங்கிய 4 பேரை ஒடிசா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மையத்தில் மற்றொரு மாணவரின் பெயரில் போலியான தேர்வுக்கூட அனுமதி சீட்டுடன் ஒரு மணி நேரம் தேர்வு எழுதிய பின் மாணவர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கினார். முறைகேட்டில் ஈடுபட்டவரிடம் விசாரித்த போது பயிற்சி மையமே போலி அனுமதி சீட்டை தந்ததாக கூறியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் ஈஸ்டில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானம் எது என பீர், ரம், விஸ்கி, பிராந்தி குறித்த கேள்வி கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வில் நடக்கும் மோசடிகள், குளறுபடிகளை உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் கூட மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த தேர்வின் போது, தாலியை கழற்றி வைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மாணவியிடம் வலியுறுத்தியது வரலாறு காணாத அத்துமீறலாகும்.நீட் தேர்வால் தமிழகத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு, முட்டுக்கட்டை போடுகிறது ஒன்றிய பாஜ அரசு. பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், நீட்டில் அதிக மதிப்பெண் எடுத்தால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதால் மாணவர்களிடம் காணப்படும் அதீத ஆர்வத்தை பயன்படுத்தி கொண்டு மோசடியை அரங்கேற்றும் கும்பல்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால் ஒருகட்டத்தில் நீட் தேர்வு ரத்து என்பது நிச்சயம் நடக்கும். அதற்கு முழுகாரணம் தமிழ்நாடு என்பது வரலாறாக இருக்கும்.