சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் வரும் ஆக. 3ம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் என 17 இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15ம் தேதி காலை, பிற்பகல் என இரு கட்டங்களாக நீட் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், 2 ஷிப்ட்களில் நீட் நடத்துவது தொடர்பான வழக்கை சில தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்படும். ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தள்ளிவைத்தது. இந்நிலையில், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் கூடுதல் நகரங்களில் வரும் ஆக.3ம் தேதி காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு நகரத்தை https://www.natboard.edu.in/ என்ற இணையதளத்தில் வரும் 13ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 17ம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்குள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். முதலில் தேர்வு நகரங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். செப்.3ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.