புதுடெல்லி: நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இத்தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதற்கட்டமாகவும், அதன் பின்னர் அதேநாளில் மாலை 3.30 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறவுள்ளது. ஆனால் 2024ம் ஆண்டில் இதேப்போன்று தேர்வு நடத்தப்பட்டதில் முதற்கட்ட தேர்வு எளிமையாக இருந்ததாகவும், இரண்டாம் கட்ட தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மேற்கண்ட பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டிலும் இரண்டு கட்டங்களாக நீட் முதுநிலை நுழைவு தேர்வை ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு “நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக தான் நடத்தப்பட வேண்டும். அதற்கான கூடுதல் தேர்வு மையங்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் ஒருவேளை ஜூன் 15ம் தேதிக்குள் கூடுதல் தேர்வு மையங்களை கண்டறிய முடியாவிட்டால், மருத்துவ தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தரப்பு மீண்டும் நீதி மன்றத்தை நாடலாம் என்று கடந்த 29ம் தேதி உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், மருத்துவ தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,\\” ஜூன் 15, 2025 அன்று நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. எனவே அதற்காக கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடத்துவதற்கான திருத்தப்பட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.