சென்னை: மின்தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த சாய்ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 நீட் தேர்வு மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் மே 4ம் தேதி மருத்துவ படிப்பிற்காக நீட் நுழைவுத்தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.
தேர்வு மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை என்றாலும், தேர்வு தொடங்குவதற்கு முன்பாக 11 மணிக்கு தேர்வு மையத்தின் வளாகத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து சோதனைகளுக்கு பிறகு 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு துவங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. தற்காலிக மின் சேவைக்காக எந்த சாதனங்களும் மையத்தில் செய்யப்படவில்லை. குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதிய நிலையில், தேர்வு மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் இருந்து தேர்வு எழுத அறவுறுத்தப்பட்டதால் மேலும் சிரமம் ஏற்பட்டது. கடுமையான சிரமத்திற்கு இடையே தேர்வு எழுதிய மாணவர்களால் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடியவில்லை. கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என தேர்வு மைய அதிகாரியிடம் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
அதனால், முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை. தேர்வுக்கு பின், மின் தடை காரணமாக சரியாக தேர்வு எழுத முடியவில்லை என இணையதளம் மூலமாக தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலருடைய கனவாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் சிறு குறைபாடும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். மின்தடை காரணமாக, மன அழுத்தம், புழுக்கம் காரணமாக சரியாக எழுத முடியவில்லை. மறுதேர்வு நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மறு தேர்வு எழுத மறுக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் எதிர்கால மருத்துவ கனவு வீணாகிறது.
அதனால், வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும். மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2ம் தேதி ஒத்திவைத்தார்.