சென்னை: நீட் தேர்வு முடிவு கடந்த ஜூன் மாதம் 4ம் தேதியும், அதன் பின்னர் நகரங்கள், தேர்வு வாரியாகவும், அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, திருத்தப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலும் என வெளியானது. இந்த நிலையில் 2024ம் ஆண்டு இளநிலை நீட் தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்களின் தரவுகளை ஒன்றிய அரசின் ‘’உமாங்க்’’, ‘’டிஜி லாக்கர்’’ தளங்களில் பதிவேற்றம் செய்ய தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.
அதன்படி விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மதிப்பெண் அட்டை மற்றும் ஓ.எம்.ஆர். விடைத்தாள் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை பார்க்க முடியும். அனைத்து விண்ணப்பதாரர்களும் உமாங்க், டிஜி லாக்கர் தளங்களுக்கு சென்று தங்கள் ஆவணங்களை அணுக முடியும். இந்த முயற்சியானது தேர்வு ஆவணங்களை எளிதாகவும், விரைவாகவும் அணுகுவதை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.