புதுடெல்லி; நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட்-ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக எடுத்திருந்தாலும் எம்.டி.எம்.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு கடந்த 20ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து செப்.25ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்தநிலையில் முதுநிலை நீட் தேர்வு எழுதிய 3 மருத்துவ மாணவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ‘ஒன்றிய அரசின் அறிவிப்பு காரணமாக நீட் முதுநிலை தேர்வின் நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷேந்திர குமார் கவுரவ், இந்த மனுவுக்கு பதிலளிக்க ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், தேசிய தேர்வுகள் வாரியம் மற்றும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டிக்கு உத்தரவிட்டார்.
மைனஸ் 40 மதிப்பெண்களாக குறைப்பதா?
3 மருத்துவ மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் தன்வி துபே மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தகுதி சதவீதம் பூஜ்ஜிய சதவீதமாக, அதாவது அனைத்துப் பிரிவுகளிலும் மைனஸ் 40 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டிருப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒன்றிய அரசின் உத்தரவு தவறானது, சட்டப்பூர்வக் குறைபாடுடையது. அது ரத்து செய்யப்பட வேண்டும். ஏனெனில் தகுதி அளவுகோல்களை பூஜ்ஜிய சதவீதமாக, அதாவது மைனஸ் 40 மதிப்பெண்களாக குறைப்பது நீட் பிஜி தேர்வை நடத்துவதன் நோக்கமே தோற்கடிக்கப்பட்டது. தகுதியின் அளவு நீர்த்துப் போனால், தேசிய தகுதி தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வின் முழு நோக்கமும் மங்கிவிடும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.