சென்னை : நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு, மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், தங்களால் முறையாக தோ்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தோ்வு எழுதிய 13 மாணவா்களும், குன்றத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய 2 மாணவா்களும், கே.கே. நகா் பத்மா சேஷாத்திரி பள்ளியில் தோ்வெழுதிய 1 மாணவா் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.அந்த மனுக்களில், கடந்த மே 4-ந்தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மறுதேர்வு கோரிக்கையை நிராகரித்து மனுக்களை தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 16 மாணவர்களும் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதே போல், நீட் தேர்வின்போது, மின்வெட்டு ஏற்பட்டதால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.