சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வைகோ தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய பாஜ அரசு பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மதிமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஒன்றிய அரசின் பட்ஜெட் உரை நகலை கிழித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் வைகோ பேசுகையில், ‘‘நீட் தேர்வை ரத்து செய்யாதது, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது துரோக செயல். அனிதா உள்பட பல உயிர்கள் நீட் தேர்வுக்காக பலியாகியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதற்கான நிதியையும் ஒதுக்கி, அந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாநில அரசை பாராட்டுகிறேன். அவர்களுக்கு பக்கபலமாக அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுவோம். மதிமுக எப்போதும் திமுகவுடன் இணைந்து இருக்கும்’’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜீவன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.