லோசான்: சுவிட்சர்லாந்தில் நடந்த டயமண்ட் லீக் தடகள போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார். இந்த தொடரில் நீரஜ் சோப்ரா (26 வயது) ஏற்கனவே 2022ல் தங்கம், 2023ல் வெள்ளி வென்றிருந்ததால், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய நீரஜ், சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்தார். ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் நதீம் அர்ஷத், டயமண்ட் லீக் பங்கேற்கவில்லை. நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான போட்டியின் தொடக்கத்தில் பின்தங்கியிருந்த நீரஜ் தனது 5வது வாய்ப்பில் 85.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து 3வது இடத்துக்கு முன்னேறினார்.
முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு 2வது சுற்று வாய்ப்பு கிடைத்தது. அதில் கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரம் எறிந்ததை அடுத்து நீரஜுக்கு நெருக்கடி அதிகரித்தது. எனினும், பதற்றமின்றி சிறப்பாக செயல்பட்ட நீரஜ் 89.49 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடம் பிடித்து மீண்டும் வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டதுடன் இந்த தொடரில் தொடர்ச்சியாக 3 பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் (90.61 மீ.) தங்கப் பதக்கம், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (87.08 மீ.) வெண்கலம் வென்றனர். நடப்பு சீசனில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்துள்ள நீரஜ், 2022ல் அதிகபட்சமாக 89.94 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தேசிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் வெல்லாவிட்டாலும் டயமண்ட் லீக்கில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.