டெல்லி: ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்சில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது. இதில், இந்தியா சார்பில் தங்க மகன் நீரஜ் சோப்ரா (26 வயது) பங்கேற்றார். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் நீரஜ் தங்கம் (87.58 மீட்டர்) வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். அதே போல இம்முறையும் அவர் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல், தகுதிச் சுற்றில் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இடையே கடும் போட்டி நிலவியது.
மொத்தம் 6 வாய்ப்புகளில் நீரஜ், அர்ஷத் இருவருமே தங்களின் முதல் வாய்ப்பில் தவறிழைத்து கோட்டை விட்டனர். 2வது வாய்ப்பில் அர்ஷத் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து அசத்தினார். கடந்த 2008 பீஜிங் ஒலிம்பிக்சில் நார்வே வீரர் ஆந்த்ராஸ் தோர்கில்ட்சென் (90.57 மீட்டர்) படைத்த சாதனையை அர்ஷத் நதீம் முறியடித்தார். அவருக்கு போட்டியாக நீரஜ் சோப்ரா தனது 2வது வாய்ப்பில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடத்தை பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்த 3 வாய்ப்புகளையும் நீரஜ் தவறிழைத்து வீணாக்கினார். இதனால் கடைசி வாய்ப்பான 6வது வாய்ப்பில் நீரஜ், பாகிஸ்தான் வீரர் அர்ஷத்தை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நீரஜ் இதுவரையிலும் எந்தப் போட்டியிலும் 90 மீட்டருக்கும் அதிகமான தூரம் எறிந்ததில்லை என்ற நிலையில், கடைசி வாய்ப்பிலும் அவர் தவறிழைத்து தங்கம் வெல்லத் தவறினார். இதன் மூலம் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தார். பாகிஸ்தானின் அர்ஷத் தங்கம் வென்று அந்நாட்டிற்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். இவர் கடைசி வாய்ப்பிலும் 90 மீட்டருக்கு அதிகமாக (91.79 மீட்டர்) எறிந்து அசத்தினார். கிரினிடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா வென்ற வெள்ளியுடன் இந்தியா ஒரு வெள்ளி, 4 வெண்கலத்துடன் 5 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையியல் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நீரஜ் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்; பாரிஸ் ஒலிம்பிக் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள்; இந்தியாவை மீண்டும் பெருமையடையச் செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “நீரஜ் சோப்ரா தொடர்ந்து 2வது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். இந்த நம்பமுடியாத வரலாற்றுச் சாதனை சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த ஒரு தனிநபரும் இதைச் செய்ததில்லை” என பதிவிட்டுள்ளார்.