``தாரீ’’ என்றால் படகு எனப்பொருள். படகு எவ்வாறு தன்னை நம்பி ஏறி அமர்வோரை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறதோ அதே போல் இந்த தாராதேவியும் தன் பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள் என ரிக்வேதத்தில் முதல் காண்டத்தில் 99வது அனுவாகத்தின் முதல் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. வேத காலத்திலிருந்தே கடைபிடித்து வந்துள்ள அற்புத உபாசனை இந்த தாராதேவியின் உபாசனையாகும். கடல் நீரில் வெண் தாமரையில் வீற்றருளி சம்சார சாகர மத்தியில் உயர்ந்துள்ள தூய பிரும்ம ஞானம்தான் என்பதை உணர்த்துபவள். வெண் தாமரையில் திடமாக அமர்ந்தும், நின்றும் அந்த பிரம்ம வித்யையிலேயே நடந்தும் நம்மை ஆபத்தான பந்தத்திலிருந்து காப்பதால், இத்தேவி தாரா எனப்படுகிறாள்.
மகாபிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்தபின், மீண்டும் சிருஷ்டித் தொழிலை துவங்கும் முன், முதலில் திருமால் அவதரித்தார். அவருடைய நாபிக்கமலத்தில் இருந்து நான்முகன் தோன்றினார். நான்முகன் தன் தந்தையான திருமாலிடம் யாரை தியானம் செய்தால், நான்கு வேதங்களையும் கற்றுணர முடியும் என வினவ, அதற்குத் திருமால் மஹா நீல சரஸ்வதி என வணங்கப்படும் தாரா தேவியை தியானிக்க வேண்டுமென்றார்.
அதன்படியே பிரம்மாவும், மஹா நீல சரஸ்வதியை தியானித்து சகல வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த பின் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். மேரு மலையில் உள்ள ‘சோளம்’ என்ற மடுவில் உள்ள தீர்த்தத்தில் தாராதேவி ஆர்ப்பவித்தாள். பின்னர், மடுவின் தெற்கு பக்கத்தில் இறங்க நீல நிறமாய் மாறி நீல சரஸ்வதி என்றானாள். உச்சிஷ்ட கணபதியின் மடி மீது எழிற்கோலம் காட்டிடும் தேவியும் நீலசரஸ்வதி என வணங்கப்படுகிறாள்.
இவளை உக்ரதாரா, ஏகஜடா என்றும் வணங்கி வழிபடுவர். வாக்குத் திறமையை அளிப்பதில் வல்லவள். கவிதை நடையிலும், உரை நடையிலும் சிறப்பாக எழுதும் ஆற்றலைத் தருவதில் வல்லவள். காளீகாண்டம் 12ம் படலத்தில், இந்த தாராதேவியின் பெருமைகள் பேசப்படுகிறது. யோகம் என்பது தாரா யோகமே; ஜபம் என்பதும் தாரா ஜபமே; மஹா மந்த்ரம் என்றால் அது தாரா மந்த்ரமே; இந்த மந்திரத்தை உபாசிப்பவனே மகாபாக்கியவான். அவனே ஞானி. அவனே சீலன். அவனே தீட்சை பெற்றவன். அவனே ஆத்ம ஸ்வரூபி. அவனே பிரம்மானந்தத்தில் திளைப்பவன் எனக் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பிறந்த குழந்தைகளுக்கு, பிறந்து மூன்று நாட்களுக்குள்ளாக தாராவின் மற்றொரு எழில் வடிவமான நீல சரஸ்வதியின் மந்திரத்தை தேனில் எழுது குச்சியைக் கொண்டு நாவில் எழுதிய தாய்மார்கள் இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. அவர்கள் பிற்காலத்தில் காஷ்மீரி பண்டிட் என சிறப்புடன் திகழ்ந்ததற்கு அதுவே காரணம் எனவும் நம்பப்படுகிறது. தாராவின் தாள்களைப் பணிவோம். தடைகளைத் தகர்ப்போம். மங்கலங்கள் தங்க அந்த மங்கை நல்லாளைத் துதிப்போம்.


