Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

நீலஞ்சம்பா...தண்ணீர் தேங்கி நின்றாலும் மகசூல் பாதிக்காது!

நமது பாரம்பரிய நெல் ரகங்களில் பல ரகங்கள் அதிக தண்ணீர் இல்லாமல் வளர்வதைப் பற்றி பார்த்து இருக்கிறோம். அதேபோல் பல நெல் ரகங்கள் தண்ணீர் ஓட்டம் அதிகம் உள்ள இடங்களில் விளைவதைப் பற்றியும் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் நீர் சூழ்ந்த நிலங்களில் செழித்து வளரக்கூடிய நெல் ரகங்களில் ஒன்றுதான் நீலஞ்சம்பா. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ரகம் அதிக அளவில் விளைவிக்கப்பட்டது. நம் பாரம்பரிய சம்பா நெல் ரகங்களில் அதிக வயதுடைய நெல்லில் இதுவும் ஒன்று. இந்த நெல்லை 180வது நாளில் அறுவடை செய்யலாம்.

சேறும் சகதியுமாக இருக்கக்கூடிய இடத்தில் நன்கு செழித்து வளரும் பக்குவம் கொண்டது நீலஞ்சம்பா. நிலத்தில் நெல்லைத் தூவி விட்டால் போதும். தானாகவே வளர்ந்து பலன் கொடுக்கும் அற்புத ரகம் இது. பெரும்பாலும் ஆடிக்காற்றில் நடவு செய்யப்படும் நீலஞ்சம்பா ஐப்பசி மழைக்கு நல்ல செழிப்பாக வளர்ந்து நிற்கும். காஞ்சிபுரம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இன்றைக்கு நீலஞ்சம்பாவை மீட்டு பலரும் பயிரிட்டு வருகிறார்கள். ஏரி, குளங்கள், ஓடைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. மற்ற ரக நெற்பயிர் சாகுபடிக்கு ஆகும் செலவை விட பாரம்பரிய நெல் ரக சாகுபடிக்கு ஆகும் செலவு குறைவுதான். பல பெயர்களில் வரும் புதிய நெல் ரகங்களுக்கு வாரி வாரி உரத்தைப் போட வேண்டும். பயிர்கள் வளரும்போது பூச்சி மருந்து அடிக்க வேண்டும். அதிகம் தண்ணீர் நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் பல பிரச்னைகளை நாமே விலை கொடுத்து வாங்கி நஷ்டம்

அடைகிறோம்.

பாரம்பரிய ரகமான நீலஞ்சம்பாவிற்கு இந்த பிரச்சினைகள் கிடையாது. பூச்சி மருந்து அடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து ரசாயன உரம் கொட்ட வேண்டிய அவசியம் கிடையாது. பார்த்துப் பார்த்து தண்ணீர் விட வேண்டிய கட்டாயம் கிடையாது. விதைகளை மட்டும் தூவினால் போதும். கதிர்கள் பீனிக்ஸ் பறவை போல் தானாகவே மேலெழும்பி வரத்தொடங்கும். விதை களைத் தூவியதில் இருந்து 155வது நாளில் கதிர்களில் இருந்து நெல் வரத்தொடங்கிவிடும். சுமார் 25 நாட்கள் கழித்து நெல்லை அறுவடை செய்யலாம். முற்காலத்தில் நீலஞ்சம்பா நெல் ரகத்தை படகில் சென்று அறுவடை செய்வார்களாம். இலைத் தத்துப்பூச்சி, கதிர் நாவாய்ப் பூச்சி என்று எந்த பூச்சித் தாக்குதலும் இதில் இருக்காது.

ஒரு ஏக்கர் நிலத்தில் 1500 கிலோ வரை நெல் தானியம் மகசூலாக கிடைக்கும். கால்நடைகளுக்கு நல்ல தரமான தீவனமாக நீலஞ்சம்பா வைக்கோல் இருக்கும். நீலஞ்சம்பாவில் சுமார் 1800 கிலோ வைக்கோல் கிடைக்கும். நெல்லை அரிசியாக மாற்றினால் 800 கிலோ வரை கிடைக்கும். நீலஞ்சம்பா அரிசி பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் ஏற்ற பாரம்பரிய உணவு. இதில் இட்லி, தோசை செய்து சாப்பிடலாம். பாரம்பரிய அரிசி ரகங்கள் பல `லோ கிளைசெமிக்’ தன்மை கொண்டவை. நிறைய நார் கொண்டவை. கருப்பு, சிவப்பு நிறங்களைத் தரும் ஆந்தோசயனின் எனும் நிறமிச் சத்து கொண்டவை. இதனை குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறையாவது கொடுத்து வளர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவ்வளவு நன்மைகள் மிகுந்த நீலஞ்சம்பா நெற்பயிர்களை விவசாயிகள் தங்களின் நிலத்தில் பயிரிட்டு பலன் அடையலாம். 

பாரம்பரிய நெல் ரகங்களில் இருந்து தயாரிக்கப்படும் அரிசி, சத்து மாவு, அவல் போன்றவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. நீலஞ்சம்பாவைப் பயிரிடும் விவசாயிகள் மதிப்புக்கூட்டியும் வருமானம் பார்க்கலாம்.

நீரில் சாயாதுநெல் சாகுபடிக்கு தண்ணீர் மிகவும் அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நெல் வளர அதிகளவில் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். அறுவடையின்போது தண்ணீரைப் படிப்படியாக குறைக்க வேண்டும். சில நேரங்களில் மழை அதிகளவில் பெய்யும்போது நிலத்தில் தண்ணீர் தேங்கி மகசூல் கடுமையாக பாதிப்படையும். நெற்பயிர் அப்படியே சாய்ந்துகொள்ளும். நீரில் நெல்மணிகள் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகும். இதுபோன்ற பிரச்னைகளைத் தாங்கி வளரும் தன்மை நமது பல பாரம் பரிய நெல் ரகங்களில் மிகுந்திருக்கிறது. எவ்வளவு தண்ணீர் தேங்கி நின்றாலும் பயிர்கள் சாயாமல் நின்று நெல் மணிகளைத் தாங்கி நிற்கும். அவற்றில் நீலஞ்சம்பா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.