மூணாறு: மூணாறு அருகே நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கேரள மாநிலம், மூணாறு அருகே பருந்தும்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. நீலக்குறிஞ்சி மலர்கள், பெரும்பாலும் தென்னிந்தியாவின் சோலை வனங்களில் கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. குறிஞ்சியில் 64 வகைகள் உள்ளன. அவை வெவ்வேறு இடைவெளியில் கூட்டமாக பூக்கும். நீலக்குறிஞ்சி வெளிர்ஊதா மற்றும் நீலநிறங்களில் அதிகளவு காணப்படும். குறிஞ்சி பூக்கள் மழையில்லாத காலநிலையில் 3 மாதங்கள் வரை பூக்கும். தற்போது நீலக்குறிஞ்சி இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூக்கள்தான், தற்போது பருந்தும்பாறை மலைக்குன்றுகளில் நீல நிறங்களில் பூத்துள்ளது.
கடந்த ஆண்டு சாந்தன்பாறை அருகே உள்ள கள்ளிப்பாறை மலைக்குன்றுகளில் குறிஞ்சி மலர்கள் ஏராளமாக பூத்து குலுங்கின. மலை முழுவதும் கூட்டம் கூட்டமாக பூத்திருந்த குறிஞ்சி மலர்களை காணவும், படம் எடுக்கவும் ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் தற்போது பருந்தும்பாறை மலைப்பகுதிகளில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை காண கனமழை எச்சரிக்கை மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் கட்டுப்பாடுகள் காரணமாக இப்போது சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை. இது சுற்றுலாப்பயணிகள் மற்றும் அப்பகுதியினரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.