ஒருபோதும் நடந்திருக்க கூடாதுதான். ஆனால் நடந்து விட்டது. காவல்துறையினர் கடுமையாக நடந்து இருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறது. 5 போலீசார் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். எஸ்பி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறார். டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் துறை ரீதியான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இவை.
திருப்புவனம் அஜித்குமார் மரணமும், சாத்தான்குளம் தந்தை-மகன் சாவும் ஒன்றா? இதுதான் இன்று எழுந்திருக்கும் கேள்வி. அன்றைய அதிமுக அரசு சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சாவை மூடிமறைக்க முயன்றது போல் இன்றைய அரசு முயற்சி செய்யவில்லையே?. நகை திருட்டு தொடர்பான புகாரில் அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரை பிடித்து திருப்புவனம் போலீசார் விசாரித்தனர். மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் வெளியே அழைத்து சென்று விசாரித்தனர். ஜூன் 28ஆம் தேதி போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அஜித்குமாரிடம் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் நிலைய விசாரணைக்கு உரிய நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இனியும் இதுபோன்ற மரணம் நிகழக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறார். சாத்தான்குளம் தந்தை,மகன் சாவு போல் திருப்புவனம் அஜித்குமார் சாவில் திமுக அரசு தப்பிச்செல்ல முயற்சிக்கவில்லை. முறையாக நடவடிக்கை எடுத்து இருக்கிறது. அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கிய மனிதாபிமானமற்ற செயலை யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாதுதான்.
இருப்பினும் திருப்புவனம் காவல்நிலைய மரண வழக்கில் ஒரு வெளிப்படையான, நியாயமான விசாரணைக்கு திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசின் நடவடிக்கை காட்டுகிறது. இந்த வழக்கில் யாரும் தப்பிக்க முடியாது. அது உறுதி. இனிவரும் காலங்களில் காவல் நிலைய விசாரணைக்கு உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தை திருப்புவனம் அஜித்குமார் மரணம் எடுத்து காட்டி இருப்பதை மறுப்பதற்கு இல்லை.
ஒரு விசாரணை கைதியை எப்படி விசாரிக்க வேண்டும் என்ற வழிமுறைகள், நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, காவல் நிலையம் முழுவதும் உரிய சிசிடிவி கண்காணிப்பில் கொண்டு வரப்பட வேண்டும். இன்னும் விசாரணைக்கான அத்தனை நடைமுறைகளும் வீடியோ பதிவு செய்யப்படும் அறையில் வைத்து நடத்தப்பட வேண்டும். அப்போது இதுபோன்ற கொடூர காவல் நிலைய மரணங்கள் நிச்சயம் தடுக்கப்படும். எனவே காவல்துறை மரணங்களை தடுக்க இன்னும் கூடுதல் சீர்திருத்தங்களை நிச்சயம் திமுக அரசு செய்யும்.