புதுக்கோட்டை: நீட் தேர்வு முழுமையாக வணிகமயமாக்கப்பட்டு விட்டது. எனவே, நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சமீப காலத்தில் கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களுடைய மீன்களை கொள்ளை அடித்து வருகின்றனர்.
மேலும், இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம், நாகை மீனவர்களை கைது செய்துள்ளனர். இலங்கை அரசுக்கு பல உதவிகளை இந்திய அரசு செய்தும், இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்வது வேதனைக்குறியது. ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி விட்டன. எனவே, தமிழக அரசும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பெரியார் பெயரை பயன்படுத்தும் நாம், அவரது கொள்கையான சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த தயங்கக்கூடாது. நீட் தேர்வுகள் முழுமையாக வணிகமயமாக்கப்பட்டு விட்டது. எனவே, நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.