Thursday, November 30, 2023
Home » வேண்டியதை அருளும் லண்டன் முருகன்

வேண்டியதை அருளும் லண்டன் முருகன்

by Kalaivani Saravanan

அப்பன் முருகப் பெருமானை, இனம், மொழி, மதம், கறுப்பர், சிவப்பர், ஊர்கள், மாநிலங்கள், மாவட்டங்கள், இந்தியா, ஐரோப்பா, ஜப்பான் என்று ஒரு வட்டத்திற்குள் வைத்து சுருக்கிவிட முடியாது. முருகன், இந்த அண்டசராசரத்தையும் காப்பவன். நியாயமான வேண்டுதலை, வேண்டுவோருக்கு, வேண்டியதை அருள்பவன். அப்படி ஒரு முருகன், நம் இந்தியாவைவிட்டு தொலைவில் இருக்கிறான். தொலைவில் என்றால் எத்தகைய தொலைவில்? 7,481 கிலோ மீட்டர். “அடேயப்பா… ஆச்சர்யத்தில் வாய்ப்பிளக்க வைக்கிறதா!’’ ஆம்! என் அப்பன், நம் அப்பன் எங்கும் இருப்பவன். எதிலும் இருப்பவன்.

இந்த அப்பன், லண்டன் மாகாணத்தில், ஈஸ்ட்ஹாம் மனோர்பார்க் என்னும் இடத்தில் அருளி வருகிறான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள், வழிபட்டு வந்தது தமிழ் முதல் முதற்கடவுள் முருகப்பெருமானைத்தான். ஐரோப்பிய கண்டத்தில், உலகின் தலை சிறந்த நாகரிகமான இங்கிலாந்து, லண்டன் மாநகரின், மக்களின் சாதனையாக வானளாவி தோன்றி, அருகுபோல் வேறூன்றி ஆல்போல் வளர்ந்து நின்று பக்தர்களின் சரணாலயமாக, ஏழாவது படைவீடாக முருகன் இங்கு அமர்ந்து பக்தர்களுக்கு, கற்பக விருட்சமாக அருள் பாலித்து வருகிறார்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வாதாரத்தைத் தேடியும், வியாபார நிமித்தமாகவும், லண்டன் மாநகருக்கு புலம் பெயர்ந்த முன்னோர்கள், அந்த காலகட்டங்களில் பலதரப்பட்ட இன்னல்களுடன் அவரவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை சரிசெய்து கொண்டு, அதே வேளையில், அங்கு வாளும் மக்களை ஆன்மிக வழியில் நடத்திச் செல்லவும், சமயம், தமிழ் கலாச்சாரம் இவைகளை வருங்கால சந்நதியினர்கள் கடைபிடிக்கும் விதமாகவும், கலந்து ஆலோசித்து, அத்துடன் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதினை நன்குணர்ந்து, அதற்கான நல்வழி இறைவழிபாடு ஒன்றே என்று தீர்க்கமான முடிவெடுத்து, அதன்படி தமிழ்க் கடவுள் முருக பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபடுவது என தீர்மானித்து, பேருள்ளம் கொண்ட அன்றைய லண்டனின் வாழும் பெரியோர்கள், 1975-ஆம் ஆண்டில், முதன் முதலாக, லண்டன் மாநகருக்கு ஏற்றவாறு ஆடம்பரம், அலங்கார புருஷனாக திருமுகன் திருஉருப்படத்தை வைத்து `லண்டன் ஸ்ரீமுருகன்’ என பெயர் சூட்டி, வழிபட ஆரம்பித்தனர்.

அதன் பின்னர், படிப்படியாக பலதரப்பட்ட லண்டன் மக்களின் ஒருங்கினைந்த உழைப்பால், பல்வேறு இடங்களில், மற்றும் அரங்கங்களில் தற்காலிகமாக அமர்ந்து அருள்பாலித்து வந்த முருகன், 1978-ஆம் ஆண்டில், கிழக்கு லண்டன் ஈஸ்ட்ஹாம் மானோர்பார்க்கில் Plashet பள்ளியில் அமர்ந்து, ஒவ்வொரு மாதமும் முறைப்படி பூஜை முறைகளுடன் அருள்பாலித்து வந்தார். அதனைத் தொடர்ந்து, 1983-ஆம் ஆண்டில், திருமுருகன் ஆலயத்திற்கென ஒரு இடத்தை வாங்கி, ஆகம சாஸ்திரங்கள்படி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவன், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீமுருகன் ஆகிய தெய்வங்களுக்கு தனித் தனியாக கருவறைகள் அமைக்கப்பட்டு, ஒரு சிறப்பான ஆலயத்தை உருவாக்கினார்கள்.

முருகனின் அருளால், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய கருத்தில் கொண்டு, புதிய கோயில் ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1999-ஆம் ஆண்டு புதுக்கோயில் கட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டு, கோயில் நல்ல முறையில் கட்டிமுடிக்கப்பட்டது. கடல் தாண்டி உலகத்தின் எந்த கண்டத்தில் வாழ்ந்தாலும், தமிழன் தன் சமயம், தமிழ் கலாச்சாரத்தை என்றென்றும் தன்னுடன் நிலைநிறுத்திக் கொள்வான் என்பதற்கு, இன்று லண்டன் மாநகரில் எழுந்தருளிய முருகன் கோயில் ஓர் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் லண்டன் மாகாணத்தின் ராணி `எலிசபெத்’, இந்த முருகன் கோயிலுக்கு வந்து சிறப்பித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. முருகன் தமிழ் கடவுள். தமிழுக்கு எல்லாம் வல்ல சிவபெருமான் தந்த செம்மொழி, எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல கருணையே வடிவான சிவன், முதற்சங்கம் நிறுவி, அவரே தலைவராக இருந்து தமிழை வளர்த்தார். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர் முருகன். தமிழில், வல்லினம், மெல்லினம், இடையினம், மெய் எழுத்துக்கள் ஆகியவை வகுக்கப்பட்டன. மூன்று இன எழுத்துக்கள் சேர்த்து, `முருகு முருகன்’ ஆகும். முருகன் என்றால், என்றும் இளையன், அழியா அழகன், கருணையே வடிவானவன் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் 12-யை, முருகப் பெருமானின் பன்னிரண்டு கரங்களை குறிக்கிறது. அதே போல், மெய் எழுத்துக்கள் 18-யை, சண்முகனின் 18 கண்களை குறிக்கிறது. மற்றும் ஆயுத எழுத்தான ஒன்றை, சண்முகத்தின் சக்தி வேலினை குறிக்கிறது. சமயத்தையும், கலாச்சாரத்தையும் வாழையடி வாழையாக கடைபிடிப்பதில் தமிழனுக்கு நிகர்தமிழன்தான் என்றுகூட நினைக்க தோன்றுகிறது.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், லண்டன் ஸ்ரீமுருகன் மேல் வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையும், அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தாய் வீட்டிற்கு வந்து செல்லும் உணர்வும், உபசரிப்பும்தான் முக்கிய காரணமாகும். மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற சோதனைகளையும், வேதனைகளையும் நீக்கி மகிழ்ச்சியையும், வெற்றிகளையும், உலக அமைதியையும், சமதானத்தையும் பெறுவதற்கு மிக முக்கியமான இறைவன் திருவருளை பெற்றுத் தருகின்ற ஆலயங்கள் இன்றியமையாதவை.

அதுவும், அயல் நாடுகளில் வாழ்கின்ற மக்களை அமைதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வாழ்வில் சிறந்திடவும், கலியுக வரதனாக, வினைதீர்க்கும் வேலனாக, குறைதீர்க்கும் குமரனாக விளங்கும் லண்டன் ஸ்ரீமுருகப் பெருமானின் பேரருளை வாரிவழங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. லண்டன் ஸ்ரீமுருகன் கோயில், கலை அழகுடன் உயர்ந்த ராஜகோபுரத்தோடு அனைவரும் வியக்கும் வண்ணம் கருங்கள் திருப்பணியோடு கூடிய புகழ்மிக்க கோயிலாக விளங்குகிறது. வருடா வருடம் நடைபெறுகின்ற இக்கோயிலின் தேரோட்டத்தை காண கண்கோடி வேண்டும்.

“சேயோன் மேயமைவரை உலகு’’ என்பதற்கேற்ப மலையில் இருந்து அருளும் முருகன், உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற இடங்களில் எல்லாம் கோயில் கொண்டு அருள் பாலிக்கின்றான், முருகப் பெருமான். இந்த கோயிலை, எம்.சிவம் என்பவரின் மேல் பார்வையில், சிவ ஸ்ரீ. ஆர். நாகநாதசிவம் குருக்கள் தலைமையிலும் வெகு சிறப்பான முறையில் பூஜைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

முருகப் பெருமானை அனுதினமும் பக்தியுடன் துதிப்போரை, “நாளும் வினைகளும் கோள்களும் கொண்டும் கூற்றும் ஏதும் செய்திட அஞ்சி அவை நலமேபயக்கும்’’ என்கிறார் அருணகிரிநாதர். முருகனின் திருவடித் தாமரையானது. பிரம்மனால் எழுதப்பட்ட நம் தலையெழுத்தையே மாற்றி நல்வாழ்வு அருளும் பெருமையுடையது. இதோ.. அருணகிரிநாதரின் பாடல்;

“தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே – நின்
தந்தையினை முன் பரிந்தின்பவுரி கொண்டுநன்
சந்தொட அணைந்து நின் றன்பு போலக்
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்சமலர்ச் செங்கையும் சிந்து வேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?’’

அவ்வாறே இந்த ஆலயத்தை பார்க்கும்போது அருணகிரிநாதர் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது. பிரித்தானியாவில் நிற்கிறோமா? அல்லது பரதகண்டத்தில், பாரததேசத்தில் நிற்கிறோமா? என்று தோன்றும் அளவிற்கு வண்ணவண்ணமாய் ஜொலித்து கம்பீரமாய் நிற்கும் ராஜகோபுரம், புஷ்கரணி, மண்டபங்கள், பெரிய ரதம், என்று புதுப் பொலிவுடன் காணப்படுகிறது இந்த ஆலயம்.

`அருணன் கதிர் மறையாத இங்கிலாந்து நாடதனில்
திருமாலின் மருமகனாம் இலண்டன் ஸ்ரீமுருகனவன்
பெருமையோடு குடிகொண்டி அருளாட்சி செய்துவரும்
திருக்கோயில் என்றென்றும் சிறப்புடனே வாழ்க வாழ்க’!!

லண்டனிற்கு சென்றால் நிச்சயம் இந்த ஆலயத்தை தரிசித்து வரவேண்டும் என்று தோன்றுகின்றதல்லவா! லண்டனின் வாழும் மக்களுக்கு அருளும் முருகனை, இங்கிருந்து மானசீகமாகவும் வேண்டுவோம்.

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?