நன்றி குங்குமம் டாக்டர்
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்களது உடலின் வெவ்வேறு பகுதிகள் வேறு வேறு விதத்தில் மூப்படைகின்றன. சிலருக்கு இளம் வயதிலேயே நரை தோன்றுகிறது. சிலருக்கு இளம் வயதிலேயே படிப்பதற்கு கண்ணாடி அணிய வேண்டியநிலை ஏற்படுகிறது.
இது போல் சிலருக்கு கழுத்து எலும்புகள் நடுத்தர வயதிலேயே தேய்ந்து விடுகின்றது. இந்த மாற்றங்கள் எலும்புகளையும் எலும்புக்கிடையே உள்ள மூட்டுகளையும் தாக்குகின்றன. இந்த மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று இன்னும் அறியப்படவில்லை. அதிக பளுவை தலையில் சுமப்பதால்தான் இந்நோய் ஏற்படுகிறது என்றும் கூறுவதற்கில்லை. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகமாக இருப்பினும் அவர்கள் பெரும்பாலானோருக்கு நோயின் தன்மை கடுமையாக இருப்பதில்லை.
அறிகுறிகள்
எலும்புகளும், அவற்றை இணைக்கும் தசை நாண்களும் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் நோயின் தன்மை சாதாரணமானது. கழுத்தை சிறிது அதிகமாக திருப்பினால் கழுத்தில் வலிக்கும். கழுத்தின் பின்புறம் தசைகள் விறைப்பாக இருக்கும்.பொருத்தமில்லாத தலையணைகள் இரவில் பயன்படுத்தினால் காலையில் எழுந்தவுடன் வலி அதிகமாக தெரியும். நாள் கணக்கில் அல்லது வாரக்கணக்கில் வலி நீடித்து பின்னர் வலி குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்.இந்த எலும்புகள் மற்றும் தசை நார்களில் ஏற்படும் மாற்றம் சிலருக்கு கை நரம்புகள், தண்டுவடம் மற்றும் மூளையின் பின் பகுதிக்குச் செல்லும் ரத்தக் குழாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
கை நரம்புகளின் மீது அழுத்தம் அதிகரித்தால் கழுத்திலிருந்து தோல்புஜம். முன்கை மற்றும் விரல்களுக்கு வலி வேகமாகப் பரவலாம். சிலசமயம் கழுத்தின் பின்புறம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கழுத்தின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். முன்புறம் மார்பின் ஒரு பக்கம் வலிப்பது எப்போதாவது ஏற்படலாம்.கழுத்தை பல நிலைகளில் அசைப்பதாலும், பொறுத்தமற்ற தலையணைகளை உபயோகிப்பதாலும் வலி அதிகரிக்கும்.
கையையும் கழுத்தையும் ஒரே நிலையில் வைத்து அதிகநேரம் வேலை செய்தால் வலி அதிகரிக்கும்.கழுத்தை ஒரே நிலையில் வைத்திருந்தால் கைகள், விரல்களில் மரத்துப்போதல் அல்லது ஊசிகளால் குத்துதல் போன்ற உணர்வு ஏற்படும். காலையில் எழும்போதோ அல்லது முகச்சவரத்திற்குப் பிறகோ அல்லது சில நிமிடங்கள் தொடர்ந்து எழுதிய பிறகோ இதை சிலர் உணர்வார்கள். சிலர் கழுத்தை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருந்தால் வலியும். மரத்துப்போன தன்மையும் மறைந்துவிட்டதாக உணர்வார்கள்.
கரடுமுரடான சாலைகளில் ஜீப், பேருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் பயணம் செய்தால் வலி அதிகரிக்கும்.நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தத்தால் தோள், முழங்கை, மணிக்கட்டு போன்ற மூட்டுகளை உபயோகிப்பதிலும் பொருட்களைப் பிடிப்பதிலும் பலவீனம் ஏற்படலாம். தண்டுவடம் அல்லது அதற்குச் செல்லும் நரம்புகள் ரத்தக்குழாய்கள் மீது அழுத்தம் ஏற்பட்டால் கால்கள் விறைத்து சோர்வடையும்.சிலருக்கு கழுத்து அசைவுகள் அதிகமாக இருந்தால் மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் ரத்தஓட்டம் பாதிக்கப்படலாம்.
அலமாரியில் மேல்தட்டிலிருந்து அடிக்கடி புத்தகம் அல்லது பைல் எடுக்கும் நூலக அலுவலர், அதிக உயரத்தில் துணியை காயவைக்கும் குடும்பத்தலைவி, காரை பின்புறம் செலுத்தும்போது அதிகமாக தலையை வெளியேவிட்டு திரும்பிப் பார்க்கும் கார் ஓட்டுநர் ஆகியோர் தலை சுற்றுவது போல் உணர்வர், சிலசமயம் நினைவுகூட சில விநாடிகள் தவறலாம்.
இது மிகவும் மோசமான நிலை, நோயாளி ஒரு சில நிமிடங்களில் சாதாரண நிலைக்கு வந்தாலும் கூட உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளி சரியான மருத்துவம் பார்க்காமல் இருந்தால் அவருக்கு கழுத்து எலும்பு ஸ்பாண்டிலோசிஸ் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு வலி, மரத்துப் போதல், தலைசுற்றுதல், சோர்வு ஆகியவை அதிகமாகவே இருக்கும்.
ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரித்தால் தலைசுற்றல் அதிகமாகும். நடுத்தர வயதினருக்கும், முதியோருக்கும் இந்நிலை காணப்படுவது அறிதல்ல. சில நோயாளிகளுக்கு கழுத்தைத் திருப்பும்போது ஒரு மெல்லிய சப்தம் வரலாம், இதற்காகப் பயப்பட வேண்டியதில்லை.கழுத்தின் மீது பலத்த அடி விழும்போதும், கழுத்தை வேகமாக அதிக அளவு திருப்பும்போதும் பக்கவாதம் அல்லது கை, கால்கள் மரத்துப்போதல் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
பரிசோதனை மற்றும் சிகிச்சையும்
எக்ஸ்ரே மூலம் இந்த நோயை எளிதாகக் கண்டறியலாம். சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற சோதனைகள் மூலமாகத்தான் கழுத்து எலும்பு ஸ்பாண்டிலோசிஸ் நோயின் உண்மையான நிலை, முழுமையான நிலை மற்றும் முற்றியநிலை ஆகியவற்றை அறிய முடியும்.
மருத்துவம்
அப்பெண்டிசைடிஸ், டான்சில்லைடிஸ் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதுபோல இந்நோயில் எந்த பகுதியையும் அறுவை சிகிச்சையால் அகற்றி இனிமேல் நோய் வராமல் தடுக்க முடியாது. ஏனென்றால் பொதுவாக இந்நோய் வயதின் காரணமாக ஏற்படுவது. ஆனால் இந்நோயின் அறிகுறிகளை நிச்சயமாகக் குணப்படுத்தலாம். அறுவை சிகிச்சை இல்லாமல் தொடர்ந்து மருத்துவம் மூலம் பெரும்பாலோர் குணமடைய முடியும். கழுத்தில் அதிக வலி ஏற்பட்டால் அல்லது கழுத்துப்பட்டை அணிவதன் மூலம் படுக்கையில் படுப்பதன் மூலமும் கழுத்துக்கு ஓய்வு கொடுத்து வலியைக் குறைக்கலாம்.
வலிநிவாரண மாத்திரைகள், வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகள், ஆபத்து இல்லாத தூக்க மாத்திரைகள் போன்றவற்றை தேவை உள்ளபோது பயன்படுத்தலாம்.
வலி உள்ள பகுதியால் பொறுக்கும் அளவு வெப்பம் அல்லது short wave Diathermy மூலம் வலியைக் குறைக்கலாம். நரம்புகள் அழுத்தப்படும்போது ஒரு சிலருக்கு ட்ராக்சன் முறை அவசியமாகிறது. நோயாளி படுக்கையில் படுத்தபடி டிராக்சன் முறையைக் கொடுக்கலாம்.
தோள்கள் மீது படியவைத்து கழுத்துக்கு ட்ராக்ஷன் தரக்கூடிய சில சாதனங்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால் டிராக்சன் இருக்கும் பொழுதே நோயாளி உட்காரலாம் அல்லது நடக்கலாம். கழுத்துப் பட்டையோ அல்லது ட்ராக்சன் முறையோ நோயாளியின் வலியைக் குறைக்கவில்லை என்றால் அந்த நோயாளி அவற்றை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று பொருள் அல்லது அந்த நோயாளிக்குக் குறிப்பிட்ட அந்த மருத்துவமுறை பொருத்தமில்லை என்று பொருள்.
வலி வராத வகையில் கழுத்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஒரு சமயம் 10-20 முறை வீதம் ஒரு நாளில் பலமுறை செய்யலாம். வலி கழுத்தில் உள்ளபோது பயிற்சி செய்யக்கூடாது. வலி ஏற்படும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ செய்யக்கூடாது. பலவந்தமாக மற்றவர் நோயாளியின் கழுத்தைத் திருப்பக்கூடாது. பக்கவாதம் அல்லது மரணம் போன்ற விளைவுகள்கூட இதனால் ஏற்படலாம். ஒவ்வொரு நோயாளியும் தன் வலியை எந்த மாதிரி தலையணை குறைக்கிறதோ அந்த மாதிரி தலையணையை உபயோகப்படுத்தலாம்.
அதற்கென தனி விதிமுறைகள் இல்லை, சிறப்பான தலையணைகள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள், சாதாரண வேலையாட்கள், குடும்பத் தலைவிகள் அவரவர்களுக்கு ஏற்றவாறு பணி முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிறப்புப் பரிசோதனைகள்
*மரத்துப்போதல், சோர்வு, தலைசுற்றல் போன்ற நரம்பு சம்மந்தமான அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் சிறப்புப் பரிசோதனை அவசியம். அவற்றுள் முக்கியமானது எம்.ஆர்.ஐ. சோதனை ஆகும். இதன்மூலம் கண்டறியப்படுபவை.
*கழுத்து எலும்புகளில் ஸ்பாண்டிலோசிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை காச நோய் போன்ற வேறு வியாதிகள் உள்ளதா.
*தண்டுவடம் மற்றும் நரம்புகள் மீது உள்ள அழுத்தம் அறுவைசிகிச்சை செய்யக்கூடிய அளவுக்கு உள்ளதா.
*எந்தக் காரணத்தால் இவ்வகை அழுத்தம் ஏற்படுகிறது.
*எந்த அளவுக்கு அழுத்தம் உள்ளது.
*எத்தனை இடங்களில் அழுத்தம் உள்ளது.
*தண்டுவடத்தில் ரத்த ஓட்டக்குறைவு போன்ற ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என கண்டறிதல்.
அறுவைசிகிச்சை முறை
அறுவைசிகிச்சை தேவை என்று முடிவு செய்தபின் நோயின் அறிகுறிகள் தீவிரமாகும் வரை தள்ளிப் போடக்கூடாது. தண்டுவடம், நரம்புகள் ஓரளவுக்கு மேல் பாதிக்கப்பட்டால் மீண்டும் முழுமையாக சரிசெய்வது கடினம். மருந்து பயனளிக்காவிடின் உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். நோய் முற்றிய நிலையில் அறுவைசிகிச்சை செய்தால் ஓரளவுதான் பலன் கிடைக்கும்.
மயக்க மருந்து கொடுத்தல், ரத்தம் ஏற்றுதல், அறுவைசிகிச்சை செய்தல் போன்ற பிரிவுகளில் நவீன முறைகள் கையாளப்படுவதால் இந்த அறுவைசிகிச்சை முறையில் ஆபத்து எதுவுமே இல்லை. முக்கியப் பகுதிகள் மீது அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அறுவைசிகிச்சைக்குப் பின் அழுத்தம் குறைந்து, நோயின் அறிகுறிகள்
மறைந்துவிடுகின்றன.
அழுத்தத்தின் தன்மை, வகை கடுமையைப் பொருத்து அறுவைசிகிச்சை முறைகள் அமைகின்றன. குறிப்பிட்ட நோயாளிக்கு சரியான அறுவைசிகிச்சை முறை தேர்ந்தெடுக்கப்பட்டு கவனத்துடன் சிகிச்சை செய்தால் வெற்றி நிச்சயம், அறுவைசிகிச்சைக்குப் பிறகும் சில நாட்கள் அல்லது வாரங்கள் கழுத்துப்பட்டை அணிய வேண்டும். கழுத்தில் அசைவுகள் வேகமானதாகவோ, கழுத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.
தொகுப்பு: துரை. நீலகண்டன்