நாகப்பட்டினம்,நவ.9: திட்டச்சேரி அருகே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் 15 கிலோ மீட்டர் தூரம் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நாகப்பட்டினம் எஸ்பி வழங்கினார்.பெருகிவரும் வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் திட்டச்சேரி கடைவீதியில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
பேரணியை எஸ்பி ஹர்ஷ்சிங் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். 15 கிலோ மீட்டர் தூரம் சென்று திருமருகல் கடைவீதியில் பேரணி நிறைவு பெற்றது. பேரணியின் போது பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எஸ்பி ஹர்ஷ்சிங் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். மீண்டும் திருமருகல் கடையில் இருந்து பேரணி புறப்பட்டு திட்டச்சேரி காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது.