புதுடெல்லி: மத்தியப்பிரதேசத்தின் சிங்ராலியில் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள மினி ரத்னா நிறுவனம் என்சிஎல் ஆகும். இந்நிலையில் இங்கு லஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சிங்ராலி, ஜபல்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சுபேதார், தலைமை விஜிலென்ஸ் அதிகாரி மற்றும் என்சிஎல் நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது ரூ.3.85கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகை பல ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அதிகாரிகளால் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜபல்பூர் சிபிஐ டிஎஸ்பி, ஓய்வு பெற்ற லெப்டினல் கர்னல், என்சிஎல் தலைமை நிர்வாக மேலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 24ம் தேதி வரை சிபிஐ காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.